சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சிம்பு அடுத்ததாக, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்நிலையில், படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் ஏற்கனவே பஹத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பநத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பாரா அல்லது மற்றொரு வில்லனாக நடிப்பாரா என்ற அறிவிப்பு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்!