• Sat. Apr 20th, 2024

கெச்சிலாபுரத்தில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

ByM.maniraj

Oct 3, 2022

காலாங்கரைப்பட்டி ஊராட்சி கெச்சிலாபுரத்தில் அறிவிக்கப்பட்ட கிராமசபைக் கூட்டத்தை கிராமமக்கள் புறக்கணித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் காலாங்கரைப்பட்டி ஊராட்சி கெச்சிலாபுரத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டு முறைப்படி விளம்பரம் செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 02 ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் கனகலட்சுமி, கயத்தார் யூனியன் அலுவலக பற்றாளர் கண்ணன், ஊராட்சி செயலாளர் முருகலட்சுமி, மக்கள் நல பணியாளர் அசோக்குமார், அங்கன்வாடி பொறுப்பாளர் முருகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேர்கள் மட்டும் கூட்டம் நடத்த காத்திருந்து பார்த்து விட்டு மக்கள் யாருமே வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உட்பட 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்கள் ஒருவர் கூடக் கலந்து கொள்ளாமல் கிராம சபைக் கூட்டத்தை முழுமையாகப் புறக்கணித்தனர். இது குறித்து மள்ளர் மீட்பு கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழர் தாயகம் கட்சி நிறுவனரும், சமூக ஆர்வலருமான செந்தில் மள்ளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்படுவதாவது-
ஊராட்சி மன்றத் தலைவர் ஒப்பந்த வேலைகளுக்கு டெண்டர் வைக்காமல் அரசின் மக்கள் நலத்திட்டங்களை நடைபெற விடாமல் தடுத்து வருகிறார். நீர்வடிப்பகுதித் திட்டத்தின் கீழ் அரசு மக்களுக்கு வழங்கிய தார் பாய்கள் , மருந்து தெளிப்பான்கள் , தையல் இயந்திரம் ஆகிய அரசு வழங்கியப் பொருள்களை ஊராட்சி மன்றத் தலைவர் வாங்கி வைத்துக்கொண்டு பயணாளிகளுக்கு வழங்காமல் இரண்டு மாதமாக ஏமாற்றி வருகிறார்.
நூறு நாள் வேலையில் இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் நபருக்கு வாரம் 100 ரூபாய் பணம் வசூல் செய்தது , தீர்மானம் இயற்றாமல் மரங்களை வெட்டி விற்றது , நீர்வடிப்பகுதி குழு அமைக்க மே 1 அன்று கிராம சபைக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்தை இரவில் யாருக்கும் தெரியாமல் மாற்றியது உள்ளிட்ட பல குற்றச் சாட்டுகளை முன்வைத்து ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஊராட்சி களின் ஆய்வாளராகிய மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட 6 ஊராட்சிமன்ற உறுப்பினர்களும் புகார் செய்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்களுக்காக காலாங்கரைப்பட்டி ஊராட்சி மன்றம் கெச்சிலாபுரத்தில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்துள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *