• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு…. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

ByP.Kavitha Kumar

Feb 28, 2025

தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினருக்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை (1.03.2025) தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவதில்லை.

ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, திமுக அரசின் சாதனைகளை, கொள்கைகளை எடுத்துரைக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவார்கள். ஆனால், இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.

இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்சினையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பும் எதிர் கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூகநலத் திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதைப்பார்த்து மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது..

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் நமக்கான நிதியை தற்போதுவரை வழங்கவில்லை. அதைபோல் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்கமாட்டோம் என்று தான் சொல்கிறார்களே தவிர மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கமாட்டோம் என்று சொல்ல மறுக்கிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள்; நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தின தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.

அப்படி நடந்தால் அதை தமிழ்நாடும், திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. நாம் அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம். தமிழ்நாட்டுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று அவர் கூறியுள்ளார்.