அகத்தியர் வழி மரபில் வந்த சித்தமருத்துவரான அகத்தீசன் (சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன்) மேற்குத் தொடர்ச்சி மலையின்வெள்ளிமலை கிராமத்தில் மகளுடன் வசித்து வருகிறார். ஆனால், அகத்தீசனிடம் மூலிகை மருத்துவம் செய்ய மறுத்து கிராம மக்கள் அவர் குடும்பத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
மனமுடையும் அவர், சித்த மருத்துவத்தை விட்டுவிடாமல் பாரம்பரிய முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் கிராமத்துக்குள் ஒருவித தோல் அரிப்பு நோய் பரவுகிறது. நோயின் தீவிரத்தால் பலர் தற்கொலை செய்யும் நிலையில், அகத்தீசன் மருத்துவம் வழியே ஒருவர் முழுமையாகக் குணமானது தெரிய வருகிறது. பின் அந்தக் கிராமம் அவரிடம் மண்டியிட, நோயைத் தீர்க்கும் மூலிகைக்காக அவர் கிராமத்தினருடன் மலையேறுகிறார்.
உண்மையில் அந்த நோயைப்போக்கும் மூலிகைக்காகத்தான் அவர் மலையேறுகிறாரா, அகத்தீசன் குடும்பத்தை அந்தக் கிராமம் புறக்கணிக்க என்ன காரணம்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.
பாரம்பரிய சித்த மருத்துவம் எவ்வாறு தனது செல்வாக்கை இழந்தது என்பதைப் பேசியிருக்க வேண்டிய படத்தை வணிகத்துக்காகஒரு குடும்பத்தின் கதையாகச் எழுதி, இயக்கியிருக்கிறார் ஓம்.விஜய்.
உலகமயமாக்கல், மேற்கத்திய கலாச்சார மோகத்தில் தமிழர்கள் தொலைத்தவற்றில் சித்த மருத்துவமும் ஒன்று என்பது குறித்து திரைப்படத்தில் பேசவில்லை என்றாலும்அது மீட்சிப் பெற வேண்டும் என்கிற நோக்குடன், தூய கிராமத்து நகைச்சுவையைத் தொட்டுக்கொண்டு சித்த மருத்துவத்தின் வலிமையையும் காலந்தோறும் அதன் தேவை தொடர்வதையும் பிரச்சாரம் இல்லாமல் வலியுறுத்தி இருப்பதற்காகவே வரவேற்கலாம்.
படத்தின் ஈர்ப்பான அம்சங்களில், தேனி மாவட்டத்தின் மேக மலையை இவ்வளவு ஊடுருவிச் சென்று படமாக்கியிருக்கும் மணிபெருமாளின் ஒளிப்பதிவு முதலிடம் பெறுகிறது.
அடுத்து என்.ஆர்.ரகுநந்தனின் இசை. இரண்டாம் பாதியில் சின்னச் சின்னபாடல்கள் அடிக்கடி வந்தாலும் அனைத்தும் கதையை நகர்த்திச் செல்வதால் அர்த்தமும் இனிமையும் கூடி ஒலிக்கின்றன.
அகத்தீசனாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியன் நடிப்பை ‘டாப் கிளாஸ்’ என்று பாராட்டலாம். சித்தர்கள் வழி மரபில் வந்த மருத்துவர்கள் சதையையும் வயிற்றையும் சுருக்கி வாழ்ந்தவர்கள் என்கிறது அனுபோக வைத்திய சிந்தாமணி நூல்.
அந்த இலக்கணத்துக்கு எதிர் நிலையில் உடல் பருமனோடு வருகிறார் கதையின் நாயகன். அவருக்கு அடுத்த இடத்தில்தேனி கிராம மக்களையேதுணைக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பது படத்தை இயல்பாக மாற்றி விடுகிறது.
இரண்டாம் பாதியில் நோயின் தீவிரத்தைத் தீர்க்கக் கூடிய மரபின் வரமாக சித்த மருத்துவம் முன்னிறுத்தப்பட்டாலும் திரைக்கதை நெடுகிலும் அதிக மரணங்களைக் காட்டிச் செல்வதைத் தவிர்த்திருக்கலாம்
இரண்டு மணி நேரத்துக்குள் படத்தை முடிப்பதற்காக ‘நோய் தீர்க்கும் உயிர் மீட்சிப் படலத்தை’ சட்டென்று சுருக்கியதும் ஏமாற்றம் அளிக்கிறது.
இதுபோன்ற குறைகளைக் கடந்து, சித்த மருத்துவத்தின் மகத்துவம் பேசும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டியது ரசிகர்களின் கடமை என்றால் அதுவே இப்படத்துக்குச் செய்யும் மரியாதை.