சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் வள்ளுவர் கோட்டம் வருகிற ஜுன் 21ஆம் தேதியன்று புதுப்பொலிவுடன் திறப்பு விழா காண இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னை வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 1974-76-ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.
இங்கு திருவாரூர் தேரை போல தத்ரூபமாக கற்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் மெரினா கடற்கரையை பார்வையிடுவது போல வள்ளுவர் கோட்டத்தையும் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
வள்ளுவர் கோட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகளும் அடிக்கடி நடைபெறுவது உண்டு. இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணியை பொதுப்பணித் துறை அண்மையில் மேற்கொண்டது. இதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 5 ஏக்கர் பரப்பளவில் வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சீரமைப்பு பணி முடிவடைந்து வரும் 21-ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா காண்கிறது. வள்ளுவனுக்கு குமரியில் சிலை அமைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தது அனைவரையும் வெகுவாக ஈர்க்கிறது.
மேலும் அதன் நுழைவு வாயிலில் ஸ்தப்தி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது. மேலும் திருவாரூர் தேர் சிலை அருகே சிறையில் பத்து நிமிட ‘லைட் அன்ட் சவுண்ட் ஷோ’ நிகழ்வு நடைபெற உள்ளது. இதேபோல நுழைவு வாயிலில் இசை நீரூற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும்.
இது தவிர வள்ளுவர் கோட்டத்தில் கூடுதலாக கஃபெடேரியா (தேநீர் விடுதி) எனப்படும் உணவகம், பல அடுக்கு பார்க்கிங் வசதி (மல்டி லெவல் பார்க்கிங் வசதி) ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பார்க்கிங் பகுதியில் 164 வாகனங்களை சர்வ சாதாரணமாக நிறுத்த முடியும்.
இது தவிர வள்ளுவர் கோட்டத்தின் தரைதளத்தில் ஏர் கண்டிஷனர் வசதியுடன் கூடிய கலை அரங்கமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் 1,500 பேர் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.
மேலும் தரை தள பகுதியில் நவீனமயமான நூலகமும், ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அதிகபட்சமாக 100 பேர் வரை அமர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
வள்ளுவர் கோட்டத்தில் முதல் தளத்தில் குறள் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு 1,330 குறளுடன் கலைஞர் கருணாநிதி உறையும் இடம்பெற்றுள்ளது. இது தவிர அதற்கான ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
மேலும் திருவாரூர் தேர் சிலையும் 106 அடி உயரத்தில் ஆபரணங்களுடன் தூண்களும் கட்டப்பட்டு பிரத்தியேகமாக மெருகேற்றப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மாற்றுத்திறனாளிகளும் வயதானவர்களும் வள்ளுவர் கூட்டத்தை கண்டுகளிக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் சாய்வு பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
வள்ளுவர் கோட்டம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் பட்சத்தில், இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவாக வர வாய்ப்புள்ளதால், இதற்கான போக்குவரத்து வசதியை சென்னை மாநகராட்சி அதிகப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
புதுப்பொலிவுடன் திறப்பு விழா காணப் போகும் வள்ளுவர் கோட்டம்
