• Sat. Apr 20th, 2024

வைகை அணை மாந்தோப்பு ஏலம் ஒத்திவைப்பு .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மாந்தோப்பு ஏலம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வைகை அணை வலது கரை மேற்கு பக்கம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 131 மா மரங்கள் உள்ளன. இந்த மாமரங்கள் மூலம் மகசூல் எடுப்பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கான ஏலம் வைகை அணை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது .

உதவி பொறியாளர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ரூபாய் 50 ஆயிரம் கேட்பு வரைவோலை வங்கிகளில் எடுத்து, 131 நபர்கள் ஏலத்தில் பங்கு கொண்டனர் .இதனைத் தொடர்ந்து ஏலம் விடப்பட்டது .அப்போது பொது ஏலம் ரூபாய் 5 இலட்சத்திற்கு வரை கேட்கப்பட்டது. இதனையடுத்து 5 லட்சத்திற்கு மேல் ஏலம் கேட்டால் உடனடியாக அதில் பாதி தொகையை வைப்புத் தொகையாக ரொக்கமாக கட்ட வேண்டும் என்றும், அதற்குப் பிறகே ஏலம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்த தகவல் தெரியாது என்று ஏலதாரர்கள் தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து ஏலம் விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.எனவே பொதுப்பணித்துறை சார்பில் மறு தேதி அறிவிக்காமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .விவசாயம் சார்ந்த இடம் என்பதால் ,மகசூலை கணக்கில் கொண்டு 10 நாட்களுக்குள் மீண்டும் ஏலம் விடப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர் .பாதுகாப்பு நடவடிக்கையாக ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து ஏலத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் கேட்பு வரைவோலை திருப்பி வழங்கப்பட்டு ,அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *