• Thu. Apr 25th, 2024

ஒரு மாதத்தில் 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byகாயத்ரி

Jan 3, 2022

நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே போடப்படும்.சிறுவர்களுக்கு தனியாக முகாம் நடத்தியும் ஊசி போடப்படும். பெரியவர்களுக்கான முகாம்களுடன் இணைந்து நடத்தினால் தனிவரிசை ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அந்த அந்த பள்ளிகளிலேயே போடப்படும். இதற்காக ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பார்கள்.
இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் விரைந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் போட்டு முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து 3 நாட்களில் ‘நெகட்டிவ்’ வந்து விடுகிறது. இருப்பினும் 5 நாட்கள் தங்கவைத்து கண்காணிக்கப்படுவார்கள். அதன் பிறகும் சோதனை நடத்தி ‘நெகட்டிவ்’ வந்தால் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *