• Thu. Sep 19th, 2024

5 நிமிட சந்திப்பு சண்டையில் முடிந்த சம்பவம்

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்ற மேகாலயா மாநில ஆளுநர் “மோடி மிகவும் திமிர் பிடித்தவர்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள் சந்திப்பு ஐந்து நிமிடத்தில் சண்டையாக மாறியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்து வருபவர் சத்யபால் மாலிக், இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்தவர். ஆளுநரான சத்யபால் மாலிக், ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமீபகாலமாக பேசி வந்தார்.


விவசாயிகள் போராட்ட விஷயத்தில் சீக்கியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதையும் நினைவுபடுத்தி ஒன்றிய அரசை எச்சரிக்கும் விதமாகவும் அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். முன்பிருந்தே பாஜக அரசை பல விஷயங்களில் எதிர்த்து பேசி வரும் அவர், பதவி போகுமென்ற பயமெல்லாம் இல்லை என்று பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்களும், ஜாட் சமூகத்தினருமே பெரும்பான்மையாக கலந்து கொண்டிருக்கும் நிலையில், ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வெறும் கையோடு ஊர் திரும்பமாட்டார்கள்.’ என்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கூறினார்.

இந்நிலையில் ஹரியானாவில் உள்ள தாத்ரியில் ஒரு விழாவில் பேசிய அவர், “அவர் மிகவும் திமிராக இருக்கிறார், அவரிடம் நான் போராட்டத்தில் 500 விவசாயிகளுக்கும் மேல் இறந்துள்ளனர் என்று கூறியபோது, ‘அவர்கள் என்னாலா செத்தார்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஆமாம், நீங்கள் பிரதமராக இருப்பதால் தான் இறந்தார்கள்’ என்றேன். பின்னர் அது வாக்குவாதத்தில் முடிந்தது. அதன் பிறகு என்னை அவர் அமித்ஷாவை சென்று பார்க்க சொன்னார். ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் கடிதம் அனுப்புவார் பிரதமர்” என்று கூறினார். விவசாயிகள் போராட்டம் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இடைவிடாது பல இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று, பல தடைகள், வன்முறைககை எதிர்கொண்டு, 600 உயிர்களை பறிகொடுத்து வெற்றியில் முடிந்தது. கடந்த வருடம் வேளாண் சட்டங்களை மோடி திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில், அது நிறைவேறிய பிறகு நவம்பர் 23-ஆம் தேதியோடு போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். ஆனால் அவர்கள் மீது ஒரு வருடமாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை நீக்குவதில் ஒன்றிய அரசு நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மாலிக் கூறி இருக்கிறார்.

“இந்த போராட்டம் முற்றிலும் ஓய்ந்தது என்று அரசாங்கம் எண்ண வேண்டாம், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான், ஏதாவது சிறு விஷயம் தவறாக நிகழ்ந்தால் கூட மீண்டும் போராட்டம் சூடு பிடிக்கும். சென்ற மாதம் கூட ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் 3 வேளாண் சட்டங்களும் கொஞ்சம் காலம் சென்று மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார். பதுங்கி இருக்கிறோம், பாய்வோம்… ஏனென்றால் விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு”, என்று மாலிக் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *