• Tue. Apr 23rd, 2024

நாளை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..

ByA.Tamilselvan

Jul 9, 2022

தமிழக முழவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்
இந்தியாவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.அதைத்தொடர்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ம் தேதி மற்றும் ஜூன் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது; ‘நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.
தற்போதைய நிலையில், 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.அதனால், அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்’ என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *