சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ‘மகா திருக்குறள் விழா – 2026’-மாபெரும் விழா நடைபெற்றது.

மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
திருக்குறளின் பெருமையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடந்த இந்த விழாவில், தமிழகம் முழுவதும் 3 முதல் 9-ம் வகுப்பு வரையிலான 50,000 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சென்னையில் 10,000 மாணவர்கள் நேரடியாகவும், 40,000 மாணவர்கள் காணொளி மூலமாகவும் ஒரே நேரத்தில் 180 திருக்குறள்களை ஒப்புவித்தனர்.

இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய போது
நான் கனவு கண்டது இன்று நடந்துள்ளது. 50,000 மாணவர்கள் திருக்குறள் சொல்லி சாதனை படைப்பது பெருமை. நேற்று டெல்லியில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு தங்கம், வைரம் கொடுக்காமல் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை பரிசாக கொடுத்தார்.இது தமிழர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.

பைபிள் கிறிஸ்தவர்களுக்கு, குர்ஆன் முஸ்லிம்களுக்கு, கீதை இந்துக்களுக்கு என்றால், திருக்குறள் முழு மனித குலத்திற்குமானது. அது மொழி,மதம், சாதிக்கு அப்பாற் பட்டது. பிரதமர் திருக்குறளை ஐ.நா.விலும், உலகெங்கும் பரப்ப வேண்டும்.

ஆங்கிலம் உயர்ந்தது என நினைக்காதீர்கள். ஆங்கிலமும் ஒரு மொழிதான். உங்கள் தாய்மொழியே உங்களின் சிறந்த மொழி. தாய் மொழியை கற்ற பிறகே மற்ற மொழிகளை கற்க வேண்டும்.நீங்கள் அனைவரும் திருக்குறளின் அச்சு பிரதிகளாக மாற வேண்டும்.
மேலும் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழ் தவறாக பேசுவது குறித்த கேள்விக்கு, அவர்களில் பலர் புதியவர்கள் கற்றுக்கொள்ள நேரம் கொடுப்போம் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநர் பேசுகையில், “ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தாய் மொழி புறக்கணிக்கப் படுகிறது.இந்த மரபை மாணவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.








