விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இனாம் மீனாட்சி புரம் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன் பணியில் இருந்து ஓய்வு பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இவரது மனைவி பாப்பா (வயது 58) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன தங்களது பசுமாட்டை தேடுவதாக கூறி அடையாளம் தெரியாத பெண் மற்றும் இளைஞர் மூதாட்டி பாப்பாவிடம் பேச்சு கொடுத்து வீட்டை நோட்டமிட்டு சென்றதாக தெரிகிறது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த இருவரும் தங்களது காணாமல் போன பசுமாடு கிடைத்து விட்டதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

இதையடுத்து தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற பாப்பாவை பின்தொடர்ந்து சென்று இருவரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ-யின் மனைவியிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்ற சம்பவம் போது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



