• Thu. Mar 28th, 2024

தலைவருக்கு துணையாக பொடி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, ‘கழக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும்.

அந்த விதத்தில் இன்றிருக்கும் 18 முதல்30 வயதுக்குள்ளான மகளிரை நமது கழகத்தில் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம்காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18 முதல்30 வயதுக்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்துக்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்.

இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்பந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை காளாப்பட்டியில் ஏற்பாடு செய்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரம் இளம்பெண்கள் சேர்க்கப்படுகின்றனர் என மகளிரணியினர் கொடுத்த தகவலை அடுத்துதான், கனிமொழி இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டார்.

கனிமொழி சந்தேகப்பட்டது மாதிரியே கோவை காளாப்பட்டியில் இளம் பெண்களை திமுக உறுப்பினர்களாகச் சேர்த்தார் உதயநிதி. அவர்கள் திமுக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டாலும் இளைஞரணி உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “கோவைக்கு குசும்பு அதிகம்னு சொல்லுவாங்க. அப்பப்ப ஏமாத்தியும் விடுகிறீங்க. இந்த மாவட்டத்துல பத்து தொகுதியில ஆறு தொகுதியாவது ஜெயிச்சுடுச்சுவோம்னு நம்பிக்கையோட இருந்தேன். ஆனால் இங்க ஒண்ணுகூட கொடுக்கல.
தமிழ்நாடு பூரா ஜெயிச்சோம்.

ஆனா கோவையில் ஜெயிக்க முடியல. மீண்டும் அந்த தவற்றை… அடுத்து நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முன் உள்ளாட்சித் தேர்தல் வருது. பார்ப்போம். செந்தில்பாலாஜி இப்போது இம்மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். அவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் அதை செய்யாமல் விட மாட்டார்.ஆட்சிக்கு இந்த எட்டு மாதங்களில் மூன்று மாதங்கள் கொரோனாவோடு போராடியிருக்கிறோம். மீண்டும் இப்போது மூன்றாவது அலைனு சொல்றாங்க.

அதுக்கும் நமது தலைவர் தலைமையிலே முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்,
தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என்று இளைஞரணிக்கு இலக்கு கொடுத்தார் தலைவர். அதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 24 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறோம்.இப்போது எல்லாருக்கும் தலைவர் இலக்கு கொடுத்திருக்கிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பத்து இருபது பேரை உறுப்பினராக இணைக்க வேண்டும்.


இங்கே பேசியவர்கள் நான் அமைச்சராக வேண்டும் என்றார்கள். சிலர் துணை முதல்வர் பதவி வரை கொண்டுபோய் விட்டார்கள். ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னைப் பற்றி தினமும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அதற்கெல்லாம் ஆசைப்படுபவன் அல்ல.என்றும் மக்கள் பணியில் உங்களோடு ஒருவராக உழைக்கிறேன். உங்களுக்குத் துணையாக தலைவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். தலைவருக்கும் உங்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *