



சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு செல்வதற்கும் மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக மேம்பாலத்தின் மேல் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேம்பாலத்தில் மேற்பரப்பில் அங்கங்கே பள்ளங்கள் காணப்படுவதாலும் மழை நீர் வெளியேற வேண்டிய பகுதிகள் முறையாக அமைக்கப்படாததாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
மேம்பாலத்தின் பகுதியில் திரும்பும் இடங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது, என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

