• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

Byமுகமதி

Aug 17, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான சிவன் கோவில் இடத்தை சுத்தம் செய்தபோது லிங்கம், ஆவுடையார் மற்றும் அம்பாள் சிற்பங்கள் வெளிப்பட்டன. குன்றாண்டார் கோவில் குருக்கள் முத்துசுப்பிரமணியன் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஆ. மணிகண்டன் கூறுகையில்,

“கண்டெடுக்கப்பட்ட சிவன் கோவில் சிற்பங்கள் 12-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த சோழர் காலக் கலைப்பாணியை சார்ந்தவை. இதன் கட்டுமானச் சிதிலங்கள் அருகிலேயே பகுதியளவு சிதிலமடைந்த நிலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 10-ஆம் நூற்றாண்டு சமண சிற்பமும், 12-ஆம் நூற்றாண்டு சைவக் கோவில் எச்சங்களும் கிடைத்துள்ளது வரலாற்று ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

சிற்பத்தின் அமைப்பும் சிறப்பும்:

கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. இது அர்த்தபத்மாசன நிலையில் தியான கோலத்தில் அமர்ந்துள்ளது.

அடையாளங்கள்: பீடத்தில் சின்னங்கள் எதுவுமில்லை. கைகள், கால்கள் மற்றும் முகம் சிதைந்துள்ளன. இருப்பினும், துளையுடைய நீண்ட காதுகள் தெளிவுறக் காட்சி அளிக்கின்றன.

கலைப்பாணி: தலைக்கு மேல் முக்குடை அமைப்பு, பின்புறம் ஒளிவட்டம் (பிரபை) மற்றும் இருபுறமும் சாமரம் வீசுபவர்களின் உருவங்கள் முற்காலச் சோழர் கலைப்பாணியில் செதுக்கப்பட்டுள்ளன.
கந்தர்வகோட்டையில் சமணத் தடயங்கள்

புதுக்கோட்டை பகுதி கி.பி. 11-ஆம் நூற்றாண்டு வரை சமண சமயத்தின் முக்கியக் களமாக திகழ்ந்துள்ளது. மெய்க்குடிப்பட்டி தவிர்த்து கந்தர்வகோட்டை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் சமண எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன

வளவம்பட்டி (9-10 ஆம் நூற்றாண்டு): அரசுப் பள்ளி வளாகத்தில் முற்காலச் சோழர் கால தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் உள்ளது.
நாட்டாணி: மக்களால் ‘புத்தர்’ எனத் தவறாக வழிபடப்பட்டு வந்த தீர்த்தங்கரர் சிற்பம், பௌத்த ஆய்வாளர் ஜம்புலிங்கம் குழுவினரால் சமண சிற்பமாக அடையாளப்படுத்தப்பட்டது.
மங்களாகோவில் (11-ஆம் நூற்றாண்டு): அக்னி ஆற்றுப் பகுதியில் 3.5 அடி உயர மகாவீரர் சிற்பம் உள்ளது.
கீழ வாண்டான் விடுதி: சமணப்பள்ளி செங்கல் சிதிலங்கள், பத்மபிரபர் சிற்பம் மற்றும் 5 அடி உயர மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளன.

நண்டம்பட்டி: பராந்தகச் சோழன் கல்வெட்டுகள் மற்றும் கற்றளி கோவில் நிலப்பரப்பில் தீர்த்தங்கரர் கற்சிற்பம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தொடரும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பண்டைய கால மத பரிணாம வளர்ச்சி குறித்த மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இந்தக் கள ஆய்வின்போது மெய்க்குடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சரவணன், தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ம.லோகேஷ், ஜெ.பவித்திரன், மா.சாய்சரண் மற்றும் மெய்க்குடிப்படி திருப்பணிக்குழு கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.