தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விலையில்லா அரிசி வழங்குகிறது.

இந்த ரேஷன் அரிசியை சில அரிசி வியாபாரிகள் கேரளாவுக்கு மொத்தமாக கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால் வருவாய்த் துறையினரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி அருகே பூட்டிய குடோனில் இருந்து 400 மூடைகளில் 27 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துபவர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு, மதுரை மண்டல மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், குடிமைப் பொருள் வழங்கல் சி.ஐ.டி அதிகாரிகள் மற்றும் கேரள மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் காவல் எல்லைப்பகுதி துணைக்கோட்ட அதிகாரிகள் ஆகியோருக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிச்செல்வி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்துதல், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்தல், தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யவும், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பிடியாணை நிறைவேற்றவும் இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல், ரேஷன் அரிசி போன்றவற்றை பெறுபவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநில எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.
எனவே, ரேஷன் அரிசி வாங்குபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு உதவ கேரளா அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், வட்ட வழங்கல் அதிகாரிகள் சரவணன் தேனி, மா. வினோதினி உத்தமபாளையம், வீ. வளர்மதி பெரியகுளம், கண்ணன் ஆண்டிபட்டி, சவடப்பன் போடி, சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் ஹுசைன்கான், பாலாஜி மற்றும் கேரள அதிகாரிகள் உடும்பன் சோலை தாசில்தார் பிரதாப், பீர்மேடு டிஎஸ்பி விஷால் ஜான்சன், டெப்டி தாசில்தார் பினோய் செபாஸ்டின், பீர்மேடு உதவி வட்ட வழங்கல் அதிகாரி சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.