• Thu. Apr 24th, 2025

தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்..தூங்குகிறதா தேனி மாவட்ட நிர்வாகம்..?

‘உங்களுக்கெல்லாம் நல்ல தண்ணீர் வேணுமாக்கும்’ என்ற கோபத்துடன் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி ஆட்களை வைத்து, பொது குடிநீர் குழாயை உடைத்தெறிந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, தனிப்பட்ட நபர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு வர மறுப்பதால் தன்னையும், தன்குடும்பத்தையும் பழிவாங்குவதற்காக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், தன் வீட்டை இடிக்க முயற்சி செய்கிறார் எனவும், பொது குடிநீர் குழாயை ஒப்பந்தகாரர் உடைத்தெறிந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சங் மற்றும் தேனி மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் ஆகியோரிடம் வினோத்குமார் என்பவர் புகார் மனுவை அளித்திருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டதாக கூறும் வினோத்குமார் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம்..,
சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியும், நானும் எனது சகோதரரும் ஆரம்பத்தில் ஒன்றாகத்தான் இருந்தோம். நான் கடந்த 2022ம் ஆண்டு எனக்கு வீடு கட்ட கட்டிட உரிமம் பெற்றுத்தான் வீடு கட்டினேன். நாங்கள் திமுகவில் இருக்கிறோம். இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். நாங்கள் அவருடன் செல்லவில்லை என்று எங்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களே கொடுத்த அனுமதி இப்போது சரி இல்லை என்கிறார்கள். எல்லா தெருக்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றாமலே ரோடு போட்டு உள்ளார்கள். எங்கள் தெருவில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றி சிமெண்ட் ரோடு போடுகிறார்கள். பேரூராட்சியில் உள்ள இத்தனை வீடுகளில் என் வீடு மட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொய் புகார் உருவாக்கி இருக்கிறார்கள்
எனது வீட்டில் மட்டும் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எங்கள் தெருவில், எங்கள் வீட்டின் அருகில் பயன்பாட்டில் இருந்த குடிநீருக்காகப் போடப்பட்டுள்ள பொதுக் குழாயை நாங்கள் குடிநீருக்காக பயன்படுத்துவதால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தூண்டுதலின் பேரில், ஒப்பந்ததாரர் குழாயை துண்டித்துள்ளார்… இப்படி அடுக்கடுக்காக தொல்லைகளைக் கொடுத்து எங்களை அடிபணிய வைக்க முயற்சி செய்கிறார் என்றார் வேதனையுடன்.
இந்த புகார்களுக்கான விடை பெறுவதற்காக பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
இந்த புகாரின் படி, உங்களுடன் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இன்று நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு வரவில்லை.. உங்களுக்கு அடிமையாக இருக்கவில்லை என்பதால் அவர்களை பழிவாங்குவதாக கூறப்படுகிறதே?
அவர்கள் உங்களுடன் இருந்தபோது வீடு கட்ட பிளான் அப்ரூவல் கொடுத்துவிட்டு, இப்போது அது சரி இல்லை என்கிறீர்களாமே?
வேறு எந்தத் தெருவிலும் ஆக்கிரமிப்பு அகற்றாமல், இவர்களை பழிவாங்கும் நோக்கில் இவர்கள் குடியிருக்கும் தெருவில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக சொல்லப்படுகிறதே? அவர்களை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக குடிதண்ணீர் பொதுககு குழாயை ஒப்பந்தகாரர் மூலம் துண்டிக்க செய்தீர்களாமே?

இப்படி அடுக்கடுக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மிதுன்சக்கரவர்த்தியிடம் முன் வைத்தோம்…

நமது கேள்விகளைப் பொறுமையாக கேட்டுவிட்டு, பதில் அளித்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி..,
இந்தப் பேரூராட்சியில் உள்ள தெருக்கள் அனைத்துமே குறுகலாக இருக்கிறது. நான் தலைவராக பொறுப்பேற்ற பின்பு 11 தெருக்களுக்கு ரோடு போட்டுள்ளேன். எல்லா தெருக்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது. இதை நேரடியாக நீங்களே தெருக்களில் போய் பார்த்துக் கொள்ளலாம், அல்லது அந்த தெருக்களில் உள்ள பொதுமக்களிடம் கேட்டாலே தெரிந்துவிடும்.
புகார்தாரர் குறிப்பிட்டுள்ள சுகதேவ் தெரு மிகவும் குறுகலான தெரு. ஆட்டோ கூட சென்று திரும்ப முடியாது. அப்பகுதியில் கூட 70 வீட்டு உரிமையாளர்களும் சாலை வந்தால் போதும் என்பதற்காக என்ஓசி கொடுத்துள்ளார்கள். அதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் புகார்தாரர் கழிவுநீர் சாக்கடையின் அகலத்தை குறைத்து கழிவு நீர் சாக்கடையின் மீது வீடு கட்டி உள்ளார். இவர்கள் எங்களுடன் இருந்து பணியாற்றிய காலங்களுக்குப் பிறகு, மின் இணைப்பு அனுமதி வாங்குவதற்காக எனது பெயரை பயன்படுத்தி உள்ளனர். இதுபோல் ஒரு சில இடங்களில் எனது பெயரை தவறான சில வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர். வீட்டுக்கு பிளான் அப்ரூவல் மட்டும் தான் வாங்கி உள்ளார்கள். இன்னும் கம்ப்ளீசன் வாங்கவில்லை. பிளானுக்கு மாறாக வீடு கட்டியிருப்பதால் அவர்களுக்கு இன்னும் கம்ப்ளிஷன் சர்டிபிகேட் கொடுக்கவில்லை. இதுதான் பிரச்சனை. இதற்கு நாம் அறிவுரை சொல்கிறோம். ஆனால் அவர்கள் விதி மீறி கட்டிடத்தை கட்டி விட்டு அதை நியாயப்படுத்தக் கூடாது.
இவர்களை நான் சார்ந்த கட்சிக்கு அழைப்பதாக கூறுகிறார்கள்? திமுக கட்சியில் இருப்பவர்களை யாராவது காங்கிரசுக்கு கூப்பிடுவார்களா? இவர்கள் என்ன கவுன்சிலர்களாக இருக்கிறார்களா? இவர்கள் வந்தால் எனக்கு எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா? அவர்கள் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்கிறார்கள். இப்போது அந்த தெருவில் 70 வீடுகள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சிமெண்ட்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒத்துப்போகாதால் சுமார் 50 மீட்டர் மட்டும் சாலை அமைக்கப்படாமல் பணி நிற்கிறது. சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பொதுக் குழாய் துண்டிக்கப்பட்டது. பணி முடிந்ததும் இணைப்பு கொடுக்கப்படும் என்றார் பொறுமையாக.
மேலும் இந்தத் தகவல் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபரைத் தொடர்பு கொண்டு பேசினோம்..,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இருந்து இது தொடர்பான எந்த புகாரும் வரவில்லை வந்தவுடன் இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றார் பொறுப்பாக.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரை பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தின் ஆய்வாளர் சண்முகப் பெருமாளிடம் இதுகுறித்துப் பேசினோம்..,
இதுகுறித்த புகார்கள் ஏதும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அவ்வாறு வந்திருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேகமாக.
இது எனன! மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் நேரடியாக கொடுக்கப்பட்ட புகார் மனு விசாரணைக்கே வரவில்லை என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளே கூறுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது.
தேனி மாவட்ட நிர்வாகமே தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க வில்லையா என்பதுதான் பொதுமக்களுடைய கேள்வியே!