


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 18 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் இரவு சுமார் 1 மணியளவில் பொள்ளாச்சியிலிருந்து மாட்டுத் தீவனத்தை ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக பல்லடம் நோக்கி வந்துள்ளார் . அப்போது லாரியின் பின்னால் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரியை வழிமறைத்து ஓட்டுநர் சுரேஷை தாக்கி அவரிடமிருந்து சுமார் 1.25 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்து சுரேஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவே வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்னர் கரடிவாவி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருவரைப் பிடித்து விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கையில் சூலூரை சேர்ந்த சபரிஷ் 21, மடத்துக்குளத்தை சேர்ந்த தனபால் 25 ஆகியோர் வெங்கட்டாபுரம் பகுதியில் லாரி யை வழிமறைத்து சுமார் 1.25 லட்சம் வழிப்பறி செய்தது தெரிய வந்தது.


மேலும் அவர்களிடமிருந்து ரூ .11,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஒருவனை காமநாயக்கன்பாளையம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

