• Tue. Feb 18th, 2025

டாஸ்மாக் அருகே நடந்த கொலையில் இருவர் கைது

ByKalamegam Viswanathan

Dec 14, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் கடந்த 10ம் தேதி அதிகாலை வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்து கிடந்த நபரை விசாரணை செய்த போது, விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட
வி.கோவில்பட்டி கிராமத்தைச்சேர்ந்த பரமன் மகன் சுரேஷ் பாபு வயது 37 என்பதும் இவர் டிரைவராக வேலை செய்து வருவதாகவும் தெரிந்தது. இதன் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மதுரை போலீஸ் சூப்பிரண்ட் அரவிந்த் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிப்படை, உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை ஆகிய தடிப்படைகள் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை விமானநிலையம் அருகே இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக மாவட்ட சூப்பிரண்ட் ஆபீசுக்கு தகவல் கிடைத்தது . இதன்பேரில் இரண்டு தனிப்படையும் டி.எஸ். பி. செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திலகரானி மற்றும் போலீசார் அப்பகுதியில் சென்று சல்லடை போட்டு தேடினர். அங்கு பதுங்கி இருந்த இரண்டு நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது, விக்கிரமங்கலத்தில் சுரேஷ்பாபுவை கொலை செய்ததாக கூறியுள்ளனர். இரண்டு பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்த போது புது விளாங்குடியைச் சேர்ந்த ராமசாமி மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் வயது 39, அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் மோண்டு என்ற முத்துவேல் வயது 37 ஆகிய இருவரும் சுரேஷ்பாவுடன் சேர்ந்து வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் சம்பவத்தன்று மூன்று பேரும் மது அருந்திக் கொண்டிருந்த போது வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், முத்துவேல் ஆகிய இருவரும் சேர்ந்து கல்லை தூக்கிப் போட்டு சுரேஷ்பாவை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் பேரில் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.