• Fri. Apr 18th, 2025

ஈரான் அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால்..,டிரம்ப் எச்சரிக்கை..,

வாஷிங்டன்: ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாவிட்டால், அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இன்று ஓமானில் நடைபெறவிருக்கும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். ஈரானை ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

“ஈரான் ஒரு மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது,” என்று ஓமனில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்ச்சியை அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதைத் தடுப்பதுதான் டிரம்பின் முதல் திட்டம். ஜனாதிபதி ராஜதந்திர ரீதியிலான தீர்வை ஆதரிக்கிறார். ராஜதந்திரம் தோல்வியடைந்தால், மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க டிரம்ப் தயாராக இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

அணுசக்தி திட்டப் பிரச்சினை குறித்து டிரம்ப் நிர்வாகம் ஈரானுடன் நடத்தும் முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று ஓமானில் நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்படும் என்றும் ஸ்டீவ் விட்கோஃப் கூறினார். இருப்பினும், அமெரிக்காவுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அணு ஆயுத உற்பத்தியை கடுமையாக எதிர்ப்பதாகவும் ஈரான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மிரட்டல்களையும், வற்புறுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் செய்தித் தொடர்பாளர் கூறினார்.