மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் பதற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டார். மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர், ”இதுபோன்ற கொடூரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் நான் அமர்ந்து கொண்டிருக்க முடியாது” என்றார். ஆளுநரின் கருத்து தேவையற்றது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தில் 8 பேர் தீ வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. எனினும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டினர்.
இந்நிலையில், அவரைக் கைது செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைன் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்கள் கடமையைச் செய்யவில்லை. அந்தப் போலீஸ்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்றார். இதையடுத்து, ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைனை நேற்று பிற்பகல் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.