சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். நேற்று நள்ளிரவு திடீரென தனியாக சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும் , காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார் .
வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் ஆரம்பித்து எஸ்பிளனேட் சாலை , மின்ட் தெரு , மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார் .
கோட்டை காவல் நிலையம் , எஸ்பிளனேட் , பூக்கடை காவல் நிலையம் , யானைக்கவுனி காவல் நிலையம் , வண்ணாரப்பேட்டை , ஆர் . கே நகர் , புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் , தண்டையார்பேட்டை ஆகிய 8 காவல் நிலையங்களுக்கு சென்று இரவு நேர பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார் .
இப்பகுதிகளில் சைக்கிளில் சென்றபோது இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள் , இரவு நேர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார் .
ஐபிஎஸ் ரம்யா பாரதி சரியாக இரவு 2:45 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணி வரை வடக்கு மண்டல பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களை ஆய்வு செய்தார் . நள்ளிரவு நேரத்தில் சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி ஐ . பி . எஸ் .- ன் இந்த செயலை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் .