• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலங்கைக்கு கடத்த முயன்ற
ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது

நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 14 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் கடலில் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக 4 படகுகள் நின்று கொண்டு இருந்தன. இதனை கவனித்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்றனர். அங்கு 2 இந்திய படகுகளும், 2 இலங்கை படகுகளும் இருந்தன. இந்த படகுகளில் தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், இலங்கையை சேர்ந்த 6 பேரும் இருந்தனர். உடனடியாக கடலோர காவல்படையினர் அந்த படகுகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், படகுகளில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3¾ டன் பீடி இலை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த பீடி இலைகளை சட்டவிரோதமாக தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைக்கு கடத்தியதும், அதனை வாங்குவதற்காக இலங்கையை சேர்ந்தவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததும் தெரியவந்தன. இதையடுத்து கடலோர காவல்படையினர், 14 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 நாட்டுப்படகுகள், பீடி இலை மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது. கடலோர காவல்படையினர் கைதான 14 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தூத்துக்குடிக்கு நேற்று மாலை கொண்டு வந்தனர். அவர்களிடம் உளவுப்பிரிவு போலீசார், சுங்கத்துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.