திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, பயணிகள் பீதியில் உறைந்தனர். வானில் வட்டம் அடைத்த படி பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 127 பயணிகளுடன் நேற்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்ட 1007 என்ற எண் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் செல்ல முடியாமல் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை வான் பரப்பில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருத்து. சில மணி நேரங்களாக விமானம் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை வழித்தடத்தில் பணித்ததால் பொதுமக்கள் காரணம் புரியாமல் வினவ ஆரம்பித்தனர்.

இதற்கிடையே இண்டிகோ விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் அது மிகவும் குறையும் வரை வானத்தில் வட்டமடிக்க அறிவுறுத்தப்பட்டது. எரிபொருள் பெருமளவு குறைந்த பின்பு மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு 9.10 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவு மீண்டும் சிங்கப்பூருக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியில் விமானம் ஒன்று 4 மணி நேரம் வட்டமடித்த சம்பவம் பயணிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் வெகு நேரம் வானில் வட்டமடித்ததும், ஆம்புலன்ஸ் தீயணைப்புத்துறை வாகனங்கள் அதிகளவு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





