கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்த அவர் கூறியதாவது.
அதிமுகவை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் ஆளுங்கட்சிக்கு மாறியதன் காரணமாக நடைபெறும் இந்த இடைத்தேர்தல், அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறுபவர்களுக்கு மக்கள் அளிக்கும் பதிலாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஆதாயத்திற்காக கட்சி மாறிய வேட்பாளர்களுக்கு மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருவது நல்ல அறிகுறி என்றும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்கள் கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று இரவும் நாளையும் முக்கியமான நாட்கள் என்பதால் வெளியில் இருந்து வரும் தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருமங்கலம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களைப் போல இல்லாமல், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தேர்தல்கள் தூய்மையான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்திய அவர், தாராபுரம் தொகுதியில் ஆங்காங்கே பண நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வருவதாகவும், பணப்பட்டுவாடாவை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SIR விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, வாக்காளர் பட்டியல் தொடர்பான குளறுபடிகள் மற்றும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Form 6 தொடர்பாகவும் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும், நடுநிலையுடன் விசாரிக்கும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் குறித்தும் அவர் பேசினார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ள நிலையில், பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
கேரளாவில் இடைமலையாறு அணை கட்டப்பட்ட பின்னர், கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக தெரிவித்த அவர், திட்டத்தை வலியுறுத்தி நவம்பர் மாதம் இருசக்கர வாகன பேரணி நடத்த உள்ளதாகவும் கூறினார்.
மாநில அரசு இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என்றும், கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் தேவை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

தேர்தலில் வெற்றி பெற்று மூன்று மாதங்களிலேயே குதிரை பேரம் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும், குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறுபவர்களைத் தடுக்க கட்சி தாவல் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தாராபுரத்தில் சில இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல்கள் வருவதாகவும், அதை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்றும் கூறினார்.
மேலும், SIR தொடர்பான குளறுபடிகளால் சில தேர்தல் முடிவுகள் மாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதற்கும் உரிய விளக்கம் தேவை என்றும் தெரிவித்தார்.
விஜய் குறித்தும் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின்போது விஜய்க்கு இருந்த கவர்ச்சி தற்போது இல்லை என்றும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்கள் பிரசாரம் செய்தாலும் கவர்ச்சியை மட்டும் வைத்து இனி அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பல கிராமங்களில் வேட்பாளர்கள் நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்றாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியாக இருக்காது என்றும் கூறினார்.
கவர்ச்சியை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்தலாம் என யாரும் நினைக்கக்கூடாது என்றும், GST வரி வருவாய், மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மூன்று மாத ஆட்சியில் அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.




