• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் புறவழிச்சாலையில் அனுமதியின்றி அரசு நிலத்தில் பேவர் பிளாக்?

தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தனியார் உணவகம் மற்றும் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில், முறையான முன்அனுமதியின்றி தன்னிச்சையாக பேவர் பிளாக் (Paver Block) கற்கள் பதிக்கப்பட்டு தனியார் கார் பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு வாகனங்கள் வந்து செல்ல ‘ரோடு ஆக்சஸ்’ (Road Access) என்ற அணுகுசாலை உரிமையை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற போதிலும், அரசு நிலத்தில் இதுபோன்ற மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறையிலோ அல்லது உள்ளூர் நகரமைப்புத் துறையிலோ தகுந்த அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது கள ஆய்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை பகுதி குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த சூழலில், சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், தன்னிச்சையாக அமைக்கப்படும் இதுபோன்ற பேவர் பிளாக் அமைப்புகள் எதிர்காலத்தில் நிரந்தர ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக பேவர் பிளாக் பதித்து, பின்னர் தற்காலிக நிழற்கூடங்கள் அமைத்து, நாளடைவில் முழுமையான ஆக்கிரமிப்பாக இது உருவெடுக்க வாய்ப்புள்ளது.

தனிநபர்கள் தங்கள் சுயலாபத்திற்காக அரசு சொத்தையும், பொதுமக்களின் சாலை பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது தவறான முன்னுதாரணமாகும். எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பும், ஆக்கிரமிப்புகள் தீவிரமடையும் முன்பும், சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று உரிய ஆய்வு மேற்கொண்டு, அனுமதி பெறப்படாமல் விதிமீறல்கள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகள் வளர விடக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.