• Thu. Apr 25th, 2024

லக்கிம்பூர் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு கன்னியாகுமரியில் அஞ்சலி!…

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் கார் மோதி ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாகர்கோயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உத்திரப்பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட அஸ்தி இங்கு இருந்து கேரள மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் மோடி அரசின் தவறான கொள்கையால் கடந்த ஆண்டுகளை விட 2020ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் தேசிய ஊரக வேலைத் திட்டம் 21 மாநிலங்களில் உரிய நிதி இல்லாததால் பணிகள் முடங்கியுள்ளது. ஆகவும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையை கடுமையாக உயர்த்தி அதன் மூலம் மத்திய அரசு இந்திய மக்கள் மீது அழுத்தத்தை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி வருவதாகவும், மக்களை மத ரீதியாக பிளவு படுத்துவதாகவும் கூறினார்.

வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவில்லை எனில் விவசாயிகளோடு இந்திய மக்கள் அனைவரும் இணைந்து போராடும் நிலை ஏற்படும் என கூறிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்து வருவதாகவும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட வரியின் மூலம் மத்திய அரசு 19 லட்சம் கோடி ரூபாய் ஈட்டி உள்ளதோடு மத்திய அரசின் கஜானாவை நிரப்பும் இந்த வரி விதிப்பு முறையை கைவிடாமல் பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலையை குறைக்க முடியாது என்றார். 42 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல் விலையை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து மத்திய அரசு வருவாய் ஈட்டி மக்களின் தலையில் பாரத்தை போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

மத்திய அரசை பொறுத்தவரை கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாப்பதுதான் அவர்களது கொள்கை எனவும், துறைமுகம், விமான நிலையம், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வாடகைக்கு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியனர். அவர் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் கூறினார்.

கடந்த காலத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்த நிலையில் வரும் காலங்களில் நடைபெறும் பிற மாநில தேர்தல்களிலும் பாஜக பொதுமக்களால் புறக்கணிக்கப் படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *