தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை தொடர்ந்து, அப்பகுதிவாழ் பக்தர்கள் விநாயகர் சிலைகளை முறைப்படி எடுத்து சென்று, இரண்டு நாட்கள் தெருக்களில் பந்தலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின், மூன்றாம் நாள் ஆற்றில் கரைப்பது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சின்னமனூர் முத்தாலம்மன் கோவில் அருகில் பாரம்பரிய முறையில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 3 அடி முதல் 8 அடி வரை பல்வேறு உயரங்களில் கலைநயமிக்க சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்களான கண்ணன், முத்துக்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கூறுகையில், “நாங்கள் ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கை முறையில் வண்டல் மண், குறுமணல், மரத்தூள், நெல் உமி மற்றும் தென்னை நார் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சிலைகளை செய்து வருகிறோம்.
3 அடி உயர விநாயகர் சிலை சுமார் 15 கிலோ எடையிலும், 7 அடி உயர சிலை 50 கிலோ எடையிலும் உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்போது, ஆற்றில் வாழும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல், வெறும் 10 நிமிடங்களில் நீரில் எளிதில் கரைந்துவிடும் சிறப்பு பெற்றவை” என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், “இன்றைய நவீன உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதிலும், எங்களின் பாரம்பரிய மண் கலை மற்றும் கைத்தொழில் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து களிமண் சிலைகளை செய்து வருகிறோம். இருப்பினும், நாங்கள் போடும் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் எங்களை போன்ற புதிய சிற்பக் கலைஞர்கள் அதிகமாக உருவாக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்றனர்.

தொடர்ந்து, பாரம்பரிய மண்பாண்ட மற்றும் கைத்தொழில் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலை செய்வதற்கு தேவையான மண்ணை எளிதாகவும் சிரமமின்றியும் பெற வழிவகை செய்ய வேண்டும் எனவும், மண்பாண்டம் மற்றும் களிமண் சிற்ப கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு மானியங்கள், நலத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
உழைப்புக்கேற்ற நியாயமான ஊதியம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த தொழில் அழியாமல் தலைமுறை கடந்து வாழும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும், பிற மாவட்டங்களை சேர்ந்த வழிபாட்டு குழுவினரும், சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத பாரம்பரிய களிமண் விநாயகர் சிலைகள் தேவைப்பட்டால் தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.




