• Fri. Apr 26th, 2024

இன்று உலக அஞ்சல் தினம்

ByA.Tamilselvan

Oct 9, 2022

ஸ்மார்ட் போன்களுக்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களின் தொலைதொடர்பு சாதனமாக இருந்து வந்தது என்பதை அறிவோம். இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட தொலைபேசி மூலமோ குறுஞ்செய்தி மூலமோ நலம் விசாரிக்கின்றோம். ஆனால், மொபைல் பயன்பாடு வருவதற்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களுக்கு மகத்தான சேவையை புரிந்துள்ளது. அந்தவகையில் அஞ்சல் முறை பழமையான தகவல்தொடர்பு முறை என அழைக்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினம் (World Post Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969-ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக அஞ்சல் தினத்தின் வரலாறு 1840-ஆம் ஆண்டுக்கு முந்தையது ஆகும். இங்கிலாந்தில், சர் ரோலண்ட் ஹில் ஒரு அமைப்பைக் கொண்டு வந்தார். இதன் மூலம் கடிதங்களின் தபால்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.உள்நாட்டு சேவையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான எடை கொண்ட அனைத்து கடிதங்களுக்கும் ஒரே விகிதங்கள் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், உலகின் முதல் தபால் தலையையும் இவர் அறிமுகப்படுத்தினார்.
முதலிடம் வகிக்கும் இந்தியா உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55,333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.
இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *