உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை, ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7)
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 1948ம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950ல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் (World Health Day) கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். உலகநாடுகளைஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் சுகாதார மற்றும் மருத்துவம் குறித்த விசேஷ நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது சுகாதாரம் தொடர்பிலான நிலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்தகவுகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகும்.
ஆலீ மேயோ மாலினுக்கு 1977ம் ஆண்டு சோமாலியாவில் பெரியம்மை வந்தபோது, அது அவனை மருத்துவமனைக்குப் போகவைத்தது மட்டுமல்லாமல், அவனுடைய பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபடும்படியும் செய்தது. சிகிச்சையளிக்கப்பட்டு அவன் குணமடைந்த பிறகு, பெரியம்மை நூற்றாண்டுகளாக லட்சோப லட்சம் ஆட்களை நாசப்படுத்திய பின்னர் பூமியிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டது என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) 1980ல் அறிவித்தது. உலகில் இந்நோய்க்குப் பலியான ஆட்களிலேயே ஆலீதான் கடைசி நபர் என்று கூறப்பட்டது. 1992ல் உடல்நலப் பராமரிப்புக்கான மற்ற நன்மைகளை WHO அறிக்கையிட்டது: 1980களின் போது வளரும் நாடுகளிலுள்ள அதிக மக்கள், பாதுகாப்பான குடிநீர் வசதிகளும் சுகாதார வசதிகளும் கிடைக்கப்பெற்றனர். கூடுதலாக, மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்களில் பெரும் சதவீதத்தினர் உள்ளூர் மருத்துவ சேவை வசதிகளைப் பெற்றனர். இவற்றின் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில், சில இடங்களில் குழந்தை மரண எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்த நன்மைகள் இழப்புகளினால் சரிக்கட்டப்பட்டு பேராபத்துக்களினால் மறைக்கப்படுகின்றன. ஹெச்ஐவி/எய்ட்ஸ் உலகம் முழுவதிலும் 1,70,00,000க்கும் அதிகமானோர் எய்ட்ஸை ஏற்படுத்தும் வைரஸாகிய ஹெச்ஐவி-யினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். நாளொன்றுக்குத் தோராயமாக 8,000 பேர் என்ற வீதத்தில், ஒரே ஒரு வருடத்தில் சுமார் 30,00,000 பேர் பீடிக்கப்பட்டவர்களானார்கள். பத்து லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஹெச்ஐவியைப் பெற்றிருக்கின்றனர். பிள்ளைகள் மத்தியில் எய்ட்ஸினால் ஏற்படும் மரணங்கள், சமீப பத்தாண்டுகளில் பிள்ளைகளின் பிழைப்பு வீதத்தில் அடைந்திருக்கும் எந்த முன்னேற்றங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதைவிட விரைவில் அதிகத்தை செய்யலாம். ஆசியாவில் அதிகரித்ததைப் போன்று அநேக இடங்களில் இந்தக் கொள்ளைநோய் வெடிக்கும் நிலையின் ஆரம்பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஹெச்ஐவிக்குப் பலியான அனைவரிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வசிக்கின்றனர் என்று எய்ட்ஸ் அண்ட் டிவலப்மெண்ட் கூறுகிறது.
எலும்புருக்கிநோய் (TB) கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பெரும்பாலும் அசட்டை செய்யப்பட்டிருந்தாலும், TB மீண்டும் ஒருமுறை உலகில் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 30 லட்சம் மக்களைக் கொன்று, தொற்றுநோய்களிலேயே உலகின் முதன்மை கொலையாளியாக ஆகியிருக்கிறது. இந்த மரணங்களில் 98 சதவீதத்திற்கும் அதிகம் வளரும் நாடுகளில் ஏற்பட்டன. மோசமான நிலைமையை மகா மோசமாக்குவதற்கு, TB பேக்டீரியா, ஹெச்ஐவி-யோடு இணைந்து, சாவுக்கேதுவான கூட்டு சேர்ந்து, அழிவுக்கேதுவான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 2025 ஆண்டிற்குள், ஹெச்ஐவி தொற்றப்பெற்ற பத்து லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் TB-யால் மரணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளைவிட தற்போது வளரும் நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருதய நோயினால் ஏற்படும் முழுவுலக அழிவுக்கு அருகாமையில் நாம் இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார் WHO-ன் டாக்டர் இவான் ட்யார்ஃபஸ். இருதய நோய் இனியும் தொழில்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளின் கொள்ளைநோயாக மட்டும் இருக்கப்போவதில்லை. எடுத்துக்காட்டாக, லத்தீன், அமெரிக்காவில் தொற்றுநோய்களினால் மரணிப்பதைவிட இருதய நோயினால் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமான மக்கள் மரணிப்பார்கள். ஒருசில வருடங்களுக்குள் இதயத் தமனி உறைவும் பாரிசவாயும் வளரும் நாடுகள் முழுவதிலும் ஏற்படும் மரணத்திற்கான முன்னணி காரணமாக விளங்கும். வெப்பமண்டல நோய்கள் காலரா அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியிருக்கிறது. மஞ்சள் காமாலை, டெங்கு கொள்ளை நோய்களும் அதைவிட அதிகமானோரைப் பாதித்தும், மலேரியாவினால் ஏற்பட்ட நிலைமை சீரழிந்தும், இவ்வாறு வெப்பமண்டல நோய்கள் கட்டுப்பாடின்றி தலைவிரித்தாடியிருப்பது போல் தோன்றுகிறது என்று WHO எச்சரிக்கிறது. உலகின் மிக ஏழை நாடுகளில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஏற்கெனவே ஒரு பெருந்தோல்வியாக இருக்கிறது. மலேரியாவினால் மட்டும் இறந்தோரின் எண்ணிக்கை இப்போது ஆண்டுக்கு சுமார் 20 லட்சமாக இருக்கிறது. ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்பே இந்நோய் பெரும்பாலும் ஒழித்துக்கட்டப்பட்டதாக எண்ணப்பட்டிருந்த பிறகும் இந்தக் கதி.
வயிற்றுப்போக்கு நோய்கள் வளரும் நாடுகளில் மரணித்த இளம் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தொற்றுநோயின் விளைவாகவோ ஊட்டச்சத்துக் குறைவின் விளைவாகவோ ஒவ்வொரு நாளும் அநேகமாக 40,000 பிள்ளைகள் மரணிக்கின்றனர். வயிற்றுப்போக்கு நோய்களினால் மட்டும் ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மரணக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 10,000 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் ஒரு லச்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 10,000 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 10,000 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் 206 நாடுகளிலும் தற்போது 13,50,000 பேர் கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 75,000 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இந்தச் சுகாதார நிலைமை நமக்கு எதைச் சொல்கிறது? “வளரும் நாடுகள் இரட்டைப் பிரச்சினையால் தாக்கப்படுகின்றன,” என்று ஒரு சுகாதார நிபுணர் சொல்கிறார். “தோன்றும் நவீன நீண்டகால நோய்கள் அனைத்தாலும், ஆனால் இன்னும் நிலவியிருக்கும் வெப்பமண்டல நோய்கள் ஒருசிலவற்றாலும் அவை இப்போது தாக்கப்படுகின்றன.” அதன் விளைவு? கவலையை உண்டாக்கக்கூடிய “புவியியல் அமைப்பினால் தீர்மானிக்கப்படும் ஒரு இடைவெளி” தெளிவாகத் தெரியலாயிற்று என்று 2000ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உடல்நலத்தை அடைவது (Achieving Health for All by the Year 2000) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, சுமார் 40 ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள உடல்நல பராமரிப்பு “உலகின் எஞ்சிய பாகங்களுக்குச் சமமாக வளரவில்லை.” சுகாதார நிலையின் இடைவெளி மிகப் பெரியதாகவும் அதிகரிப்பதாகவும் இருக்கிறது.
அகன்றுவரும் இந்த இடைவெளிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், குறைவுபட்ட உடல்நலத்திற்கான ஒரு முக்கிய காரணம் “வறுமையாக இருக்கிறது” என்று உலக சுகாதாரம் என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது. வறுமையானது பெரும்பாலும் மக்களை சுகாதாரமற்ற, போதிய மற்றும் பாதுகாப்பான தண்ணீர் இல்லாத, மக்கள் நெருக்கடி நிறைந்த, நெருக்கமான இடவசதியுடைய வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட, குறைபாடுள்ள வீடுகளில் வசிக்கும்படி தள்ளிவிடுகிறது. இந்த மூன்று காரணிகளும் உடல்நலத்தைப் பாதிப்பது மட்டுமன்றி மெய்யாகவே நோய்களையும் ஏற்படுத்துகின்றன. இதற்குக் கூடுதலாக, நோய்நொடிகளுக்கு எதிராக போராடக்கூடிய உடலின் பாதுகாப்பு அமைப்பைப் பலவீனப்படுத்திவிடும் ஊட்டச்சத்துக்குறைவை சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் மரத்தை கரையான் அரிப்பதைப்போன்று உடல்நலத்தை வறுமை அரித்துப்போடுவதேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
உலகம் முழுவதும் குடிசைவாழ் மக்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் மனமுறிவடைந்து உணரும்படி விடப்பட்டிருக்கின்றனர் என்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. வறுமைக்கான அடிப்படைக் காரணங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாய் இருக்கின்றன. நோயை ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகள் அவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றன. வறுமையின் பிடியில் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்கள் என்றால், சுகாதார நிலையின் இடைவெளியின் பரிதாபகரமான பக்கத்தில் நீங்களும் நம்பிக்கையேதுமின்றி மாட்டிக்கொண்டிருப்பதாக உணரலாம். எனினும், ஏழையாக இருக்கிறீர்களோ இல்லையோ, உங்களுடைய உடல்நலத்தையும் உங்களுடைய பிள்ளைகளின் உடல்நலத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் இருக்கின்றன. மக்களுக்கான தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசு உறுதியளிக்க வேண்டும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடங்க உறுதி எடுங்கள். அதற்க படிப்படியான முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- நீங்கள் கடைசியாக உடற்பயிற்சி செய்தது எப்போ…? உடற்பயிற்சி மீண்டும் இன்றே தொடங்குங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். உடற்பயிற்சியை அன்றாட வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
- ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவையே சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்கிறேன் என்று கலோரி அதிகமுள்ள ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டாமல் இருக்காதீரகள்.
- ஆரோக்கியமான உடல் எடையை பாரமரிக்க வேண்டியது அவசியம்.
- உணவுகளை தவிர்க்காமல் வழக்கமான அளவில் சாப்பிடுங்கள். டயட் என்று சொல்லி உணவின் அளவைக் குறைக்காதீர்கள். இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
- ஒவ்வொரு முறை உணவு சாப்பிடும் போதும் உடலுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடுவதற்கான வாய்ப்பாக கருதி சாப்பிடுங்கள்.
- ஒவ்வொரு பருவத்திற்கு என பிரத்யேகமாக வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். உள்ளூரில் விளையும் காய்கறிகளையே அதிகம் சாப்பிடுங்கள்.
- உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் நீண்ட காலம் சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் இன்றி இருக்கலாம்.
- உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- மன அழுத்தம் குறைய யோகா போன்றவற்றை செய்யத் தொடங்குங்கள். இதனால் வேலையிலும் செயல் திறன் அதிகரிப்பதை உணர முடியும்.
பஞ்ச பூதங்களின் மொத்த உருவம்தான் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் சிறிய வடிவம்தான் மனித உடல். ஆம், உடலும் பஞ்ச பூதங்களால் ஆனதுதான். ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். உலக சுகாதார தினத்தில் உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமையும் கூட என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.