மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).
உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி” என்பதை அங்கீகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன. மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும். உலக மிதிவண்டி நாள் இனம், மதம், பாலினம், வயது, பாலியல் சார்பு, அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் நாள் ஆகும். உலக மிதிவண்டி நாள் தற்போது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது.
மோட்டார் வாகனங்களின் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களும் வங்கிகள் அளிக்கும் சுலப தவணை திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். டெல்லியில் பெருகிவிட்ட வாகன பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அரசு. ஒற்றை இலக்க வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க வாகனங்கள் ஒரு நாளும் செயல்படுத்த விதி முறைகள் கொண்டு வந்தும் பலன் கிடைக்கவில்லை. வாகனப் புகை அதிகரிப்பை கட்டுப்படுத்த 2000 சிசி வாகனங்கள் விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதுவும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. வாகனப் பயன்பாட்டையும், மாசுபெருக்கத்தையும் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எதுவுமே வெற்றியடைவதாகத் தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மிக எளிமையான, மலிவான தீர்வு ஒன்று உள்ளது. ஆனால், அதைப் பின்பற்ற நம்மில் யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுதான் சைக்கிள். சமீபத்தில் சக்தி மற்றும் வளம் சார்ந்த மையமான தெரி (TERI) அமைப்பு அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்போடு ஒரு ஆய்வை இந்தியாவில் நடத்தியது.
அதில் இந்தியர்கள் குறைந்த தூரத்துக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்தாலே ஆண்டுக்கு ரூ. 1.80 லட்சம் கோடி மிச்சமாகும் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். உடல் நலனும் நன்றாக இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் சைக்கிளைப் பயன்படுத்தினால், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். பயன்பாடு குறைந்தால், கச்சா எண்ணெய்யின் தேவை குறையும். தானாகவே அதன் இறக்குமதி அளவும் குறையும். இப்படி ஒருபக்கம் நேரடியான பொருளாதார பலன்கள் கிடைப்பதோடு, உடல்நலன் பாதுகாக்கப்படுவதன் மூலம், தனிநபர்களின் மருத்துவ செலவும் குறையும். இவ்விதம் மிச்சமாகும் தொகை 2015-16-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 1.6 சதவீதம் ஆகும். குறைந்தது 8 கி.மீ. பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறைந்தாலே மிச்சமாகும் எரிபொருள் தொகை ரூ.2,700 கோடியாகும். இதேபோல கார் உபயோகத்துக்குப் பதிலாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதால் உடல் நலன் காக்கப்படும். இதனால் மிச்சமாகும் மருத்துவ செலவு தொகை ரூ.1,43,500 கோடியாகும்.
வாகன புகையால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க செலவாகும் ரூ.24,100 கோடியும் மிச்சமாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்போதுதான் முதல் முறையாக ஆதார பூர்வமாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின்படி, சராசரியாக ஒருவர் 3.5 கி.மீ. தூரம் நடந்தால் ரூ.11,200 கோடி மிச்சமாகுமாம். மேலும் 10 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படும். மிச்சமாகும் தொகை ரூ.1.80 லட்சம் கோடியானது சுகாதாரத் துறைக்கு அரசு ஓர் ஆண்டுக்கு செலவிடும் தொகையை விட அதிகமாகும். 2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியாவில் சைக்கிள் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை ஒரு சதவீத அளவுக்கே வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் கிராமப்பகுதிகளில் இந்த வளர்ச்சியானது 3.4 சதவீதமாக இருந்தது. நகர்ப்பகுதிகளில் சைக்கிள் உபயோகம் 4.1 சதவீதம் சரிந்துள்ளது. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்றான கருத்து மேலோங்கியதும் சைக்கிள் உபயோகம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாயிற்று. மேலும் மாநில அரசுகள் இலவசமாக சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கத் தொடங்கின.
பெரும்பாலும் இவை தரமற்றவையாக இருந்ததால் சைக்கிள் மீதான அபிப்ராயம் சரிந்தே போனது. முன்பெல்லாம் தாத்தா உபயோகித்த சைக்கிளை பேரன் வரை பயன்படுத்தினர். ஆனால் இப்போது ஒரு குழந்தையே மூன்று நான்கு சைக்கிளை பயன்படுத்தும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு உள்ளது சைக்கிள்களின் தரம். சைக்கிள் நமக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் பயனளிக்கும் வாகனம் என்ற எண்ணம் அதிகரிக்கும்போதுதான் சைக்கிள் உபயோகம் அதிகரிக்கும். அதுவரை வாகன நெரிசலும், சூழல் மாசையும் அதற்கு விலையாகத்தான் தர வேண்டியிருக்கும். மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால், மோட்டார் வாகன உற்பத்தி குறையும். அல்லது, குறைந்த அளவே கரியமில வாயு வெளியாகும்படியான வாகனங்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கும். அப்படிச் செய்தால் மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் சுமார் நூறு டன் கரியமில வாயு வெளியீட்டிலிருந்து பூமி தப்பிக்கும். காற்று மாசு, சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்குவதோடு பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். அதனால் மனிதர்களின் உற்பத்தித் திறனும், வாழ்க்கைத் தரமும் குறையும்.
பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று. தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும். இதன் பிறகு மிதிவண்டியை இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர் மக்கள். அவர்களில் ஒருவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது. இந்த சைக்கிள் 1818 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் மெருகேறுவது வழக்கமான விசயம்தானே. சைக்கிளும் அதற்கு விதிவிலக்கல்ல.
அதுவரை மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818 ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் எனப்படும் மிதி இயக்கி இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது. ஆனால் இந்த சைக்கிளில் பின்புறச் சக்கரம், முன்புறச் சக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரிதாக இருந்தது. அதனைதொடர்ந்து மேம்பட்ட மிதிஇயக்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார் பிரான்ஸைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிசாக்ஸ் அவரது தீவிர உழைப்பின் பலனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் மற்றும் பால் பியரிங்க்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதிஇயக்கி ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முந்தைய சைக்கிள்களை விட மிசாக்ஸ் கண்டுபிடித்த சைக்கிளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் அதனை பயன்படுத்தும் முறை எளிதாக்கப்பட்டது தான்.
சைக்கிளில் ஒவ்வொரு பாகமாக மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சக்கரம் என்னவோ மரத்தால் ஆனதாகவே இருந்தது. இதற்கும் ஒரு தீர்வு கண்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி. பென்னி பார்த்திங் என்ற கொல்லருடன் இணைந்து, சைக்கிளின் சக்கரங்களையும் அவர் உலோகத்தில் உருவாக்கினார். இவர்களது முயற்சியின் விளைவாக 1872ம் ஆண்டு பெண்களும் பயன்படுத்தும் வகையிலான புதிய நேர்த்தியான சைக்கிள்கள் உருவானது. பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்கள் இந்த காலகட்டத்தில் விற்பனைக்கு வந்தது. 1876ம் ஆண்டு சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டு தான், ஹென்றி லாசன் என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) போன்றவற்றை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இப்படியாக ஒவ்வொரு மாற்றங்களாய் பெற்று, 1885ம் ஆண்டு சான் கெம்பு இசுட்டார்லி என்பவர் புதிய மிதிவண்டி ஒன்றை உருவாக்கினார். இவர் தான் இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் வடிவமைத்த மாடலைத் தான் இன்று நாம் பயன்படுத்துகிறோம்.
ஆனால் நம் நாட்டில் போக்குவரத்திற்குப் பயன்படுத்த சைக்கிளை உடற்பயிற்சிக்கான ஒரு கருவியாக மாற்றி வைத்திருக்கிறோம். இது நிச்சயம் சைக்கிளின் 2.0 வெர்சன் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்குள் ஒரே இடத்தில் சைக்கிள் போன்ற இயந்திரத்தில் உடற்பயிற்சி செய்வதைவிட இயற்கையான சூழலில் நிஜ சைக்கிளை ஓட்டுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இந்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். சென்னை போன்ற மாநகரங்களில் காலை அல்லது இரவு நேரத்தில், போக்குவரத்து குறைந்த சாலைகளில் பலர் சைக்கிளில் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதுவும் உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சைக்கிள்கள் தான் என்றாலும், இப்படியாவது அதனை பயன்படுத்துகிறார்களே என நிம்மதி அடைய முடிகிறது.
மிதிவண்டியை ஓட்டுவதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி தசைகள் வலுப்பெறவும், கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையவும் உதவுகிறது. மிதிவண்டி ஓட்டுவதால் ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கலோரிகள் வரை எரிக்க முடியும். நீரிழிவு, மாரடைப்பு போன்ற பல நோய்கள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். எரிபொருள் தேவை குறையும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிக்கொண்டே போவதால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற, இத்தகைய மாற்று வழிகளைக் கொள்கை அளவில் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.