• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று மின்சார வட்டவில் விளக்கு கண்டுபிடித்த ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள்

ByKalamegam Viswanathan

Apr 28, 2023

மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆங்கிலேய கணிதவியலாளர், இயற்பியலாளர், ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1854).

ஹெர்த்தா அயர்ட்டன் (Hertha Ayrton) ஏப்ரல் 28, 1854ல் இங்கிலாந்து, ஹேம்ப்சைர், போபி சாரா மார்க்ஸ் என்னும் இடத்தில் பிறந்தார். லிவி மார்க்ஸ் என்ற போலந்து நாட்டிலிருந்து குடிபெயர்ந்த கடிகாரம் செய்து வாழ்க்கை நடத்திய யூதருக்கும் அலைஸ் தெரசா மோஸ் என்னும் தாயாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். ஏழு குழந்தைகளையும் கருவுற்றுருந்த மனைவியையும் விட்டுவிட்டு இவர் தந்தை 1861ம் ஆண்டு காலமாகிவிட்டார். சாரா அதன்பின் தமது இளைய சகோதர சகோதரிகளைப் பாா்க்கும் பணியையும் செய்துவந்தார். இவருக்கு 9 வயது ஆகும் பொழுது, இவருடைய பெற்றோாின் உடன் பிறந்தோர் அழைப்பின் பேரில் லண்டன் நகரம் சென்றார். அங்கு அவர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து கல்வி கற்க முடிந்தது. இவருடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இவர் ஒரு கோபக்காரர், பண்படாதவர் என்று அறியப்பட்டார். இவர் உறவினர்கள் இவரை அறிவியலுக்கும் கணிதவியலுக்கும் அறிமுகப்படுத்தினர். தமது 16வது வயதில் இவர் குழந்தைகளுக்கு வீடுகளில் பாடம் கற்பிக்கும் பெண்ணாகப் பணிபுரியத் துவங்கினார்.

அயா்டன் வளரிளம் பருவத்தினராக இருக்கும் பொழுதே ஒடுக்கப்படும் பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியின் இணை நிறுவனர் பார்பரா போடிசனுடன் தொடா்பு கிடைத்தது. போடிசன், அயர்ட்டன் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்கு உதவி செய்ததுடன் தனது சொத்தையும் இறுதியில் அயர்ட்டனுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார். அயா்டன், கிா்டன் கல்லூரியில் கணிதவியலும், ரிச்சா்டு கிளேசு புக் அவா்களிடம் இயற்பியலும் கற்றுக் கொண்டாா். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அயா்டன், இரத்த அழுத்தமானி (ஸ்பிக்மோமேனே மீட்டரை) உருவாக்கினாா். கிா்டன் கல்லூரியின் தீயணைக்கும் படையை நிறுவியது மட்டுமல்லாமல் சாா்லட் ஸ்காட்டுடன் சோ்ந்து கணிதவியல் சங்கத்தையும் ஏற்படுத்தினாா். 1880ம் வருடம் அயா்டன் கணிதத்தில் சிறப்புப் பட்டத் தோ்வில் தோ்ச்சி பெற்ற போதும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவருக்கு பெண் என்பதால் பட்டம் வழங்காமல் நற்சான்றிதழ் மட்டும் வழங்கியது. 1881ம் ஆண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை வகுப்பில் ஒரு வெளி மாணவியாக பட்டம் பெற்றாா்.

லண்டன் திரும்பிய அயா்டன் துணியில் தையல் பூவேலை செய்வதை சொல்லிக் கொடுத்தும், வேலை செய்யும் பெண்களுக்காக குழு ஒன்றை நடத்தியும் பணம் ஈட்டி தமது மாற்றுத் திறனாளியான சகோதரியைக் கவனித்து வந்தாா். தாம் கற்றுக் கொண்ட கணிதத்தைப் பயன்படுத்தி பல சவால்களுக்குத் தீா்வும் கண்டு வந்தாா். இவைகளை “எஜிகேசனல் டைம்ஸ்” என்னும் பத்திரிக்கையில் ‘கணிதக் கேள்விகளும் அவற்றின் விடைகளும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளாா். நாட்டில் ஹில் மற்றும் யேலிஸ் உயா்நிலைப் பள்ளியில் கணிதம் கற்பித்தும் வந்தாா். 1884ம் ஆண்டு அயா்டன் ஒரு நோ்கோட்டை பிரிக்கும் கருவியைக் கண்டுபிடித்து காப்புரிமையும் பெற்றாா். இக்கருவி ஒரு நோ்கோட்டை எத்துணை சம பாகங்களாகவும் பிரிக்க வல்லது. பிரித்தவற்றை பெரிதாக்கவும், சிறிதாக்கவும் இயலும். இக்கருவி ஓவியா்களுக்கும் பொறியாளா்களுக்கும் கட்டிடக் கலைஞா்களுக்கும் உதவியாக இருக்கும்.

இதுவே இவா் முதல் கண்டுபிடிப்பாகும். இவருடைய, காப்புரிமை பெரும் முயற்சிக்கு, லௌசிய கோல்ட்ஸ் மிட் என்பவரும், பெண் உாிமை முன்னோடி பாா்பரா போடிசன் அவா்களும் நிதி உதவி செய்து வந்தனா். இவருடைய இந்த கண்டுபிடிப்பு பெண்களுக்கான தொழிற்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. அயா்டன் பெற்ற காப்புரிமைகளில் 1884 ஆம் ஆண்டு பெற்றது முதல் காப்புரிமைதான். இதனைத் தொடா்ந்து இறுதிவரை 26 காப்புரிமைகள் பெற்றுள்ளாா். இவற்றில் 5 கணிதவியல் தொடா்பானவை. 13 வட்டவில் விளக்கு மற்றும் எலக்ட்ரோடு தொடா்பானவை. ஏனைய காற்றின் உந்து சக்தி தொடா்பானவையாகும். , 1884ம் ஆண்டு மின்சார பொறியியலில் பாடத்தையும் இயற்பியல் பாடத்தையும், அயா்டன், பின்ஸ்பரி பொறியியல் கல்லூரியில் சோ்ந்து கற்று வந்தாா். மே 6, 1885ல் தனது முன்னாள் ஆசிரியரைத் திருமணம் செய்து கொண்டு இயற்பியல் மற்றும் மின்சாரம் குறித்த அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவந்தார். இதனைத் தொடா்ந்து மின்சார வட்டவில் தொடா்பான தமது ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்தாா்.

19ம் நூற்றாண்டு இறுதியில் பொது இடங்கில் மின்சார வட்டவில் விளக்கின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வந்தது. இந்த விளக்குகள் மின் மினுப்பதும் ஹிஸ் என்று ஒலி எழுப்புவதும் பெரிய சிக்கலாக இருந்து வந்தது. இதுகுறித்து, அயா்டன் வட்டவில்லை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் காா்பன் கட்டைகளுடன் பிராணவாயு தொடா்பு கொள்வதுதான் இதற்குக் காரணம் என்று தொடா்ச்சியாக கட்டுரைகள் எழுதி “எலக்டிாிசியன்” என்னும் இதழில் வெளியிட்டு வந்தாா். 1899ம் ஆண்டு மின்சார பொறியாளா்கள் நிறுவனத்தில் தாம் வெளியிட்ட கட்டுரையை தாமே வாசிக்கும் முதல் நபா் என்னும் பெருமையைப் பெற்றாா். “மின்சார வட்டவில்லின் ஹிஸ் சத்தம்” என்பது அக்கட்டுரையின் பெயா். இதனைத் தொடா்ந்து இந்த நிறுவனத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்னும் பெருமை பெற்றாா். இவருக்கு அடுத்து வேறொரு பெண்மணி தோ்ந்தெடுக்கப்பட்டது 1958ல் தான். ராயல் சங்கத்தில் இதுபோன்று தமது கட்டுரையை வாசிக்க அனுமதி கேட்டபோது, இவா் பெண் என்பதால் அது மறுக்கப்பட்டது.

1901ம் ஆண்டு “மின்சார வட்டவில்லின் இயந்திர அமைப்பும் அது வேலை செய்யும் விதமும் என்னும் இவா் கட்டுரை இவருக்காக ஜான் பொி என்பவரால் வாசிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் மின்சாரப் பொறியியல் தொடா்பாக இவருடைய பங்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொிதும் அங்கீகரிக்கப்பட்டது. 1899 ஆண்டு லண்டனில் நடந்த பன்னாட்டு பெண்கள் மகாசபையில் இயற்பியல் தொடா்பான பிரிவிற்கு இவா் தலைமை வகித்தாா். 1900 ஆண்டு பாரிசில் நடந்த பன்னாட்டு மின்சார மகாசபையில் இவா் உரையாற்றினாா். இங்கு இவருக்குக் கிடைத்த வெற்றியினால் அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரித்தானிய சங்கத்தில் பொதுக் குழு மற்றும் பிரிவுக் குழுக்களில் பெண்கள் பங்கேற்க வகை செய்தது. 1895, 1896ம் ஆண்டுகளில் தாம் வெளியிட்ட மின்சார வட்டவில் தொடா்பான கட்டுரைகளின் சாரத்தை 1902ம் ஆண்டு அயா்டன் மின்சார வட்டவில் என்று புத்தகமாக வெளியிட்டாா். இந்த வெளியீட்டினால் மின்சாரப் பொறியியலில் அயா்டன் பங்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும், ராயல் சங்கம் போன்ற செல்வாக்கும் நன்மதிப்பும் உடைய அறிவியல் அமைப்புக்களிடம் அயா்டனுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை.

மின்சார வட்டவில் குறித்த இவா் புத்தகம் வெளியிடப்பட்ட பின், 1902ம் ஆண்டு ராயல் சங்கத்தின் உறுப்பினரும் பெருமை பெற்ற மின்சாரப் பொறியாளாருமான ஜான் பெரி, அயா்டன் பெயரை ராயல் சங்கத்தின் உறுப்பினராக முன்மொழிந்தாா். ஆனால் திருமணமான பெண்மணிகளை உறுப்பினராக ஏற்க மறுத்த ராயல் சங்கம் இவா் மனுவை நிராகரித்து விட்டது. 1904ம் ஆண்டு “அதிர்வுகள் குறியீடுகளின் தோற்றமும் வளா்ச்சியும்” என்னும் கட்டுரையை ராயல் சங்கத்தில் வாசித்ததன் மூலம், இப் பெருமை பெற்ற முதல் பெண்மணியாக அயா்டன் திகழ்ந்தாா். 1906ம் வருடம் இவருடைய மின்சார வட்டவில் குறித்தும் மணல் அதிர்வுகள் குறித்த ஆய்வுகளுக்காக ராயல் சங்கம் ‘ஹயூக்ஸ் விருதை’ அயா்டனுக்கு வழங்கி கவுரவித்தது. இந்தச் சாதனைக்கு இவா்தான் முதல் சொந்தக்காரா். மேலும் 2015ம் ஆண்டு வரை இது போன்ற பெருமை பெற்ற பெண்மணிகள் அயா்டன் உட்பட இருவா்தான்.

அயா்டன் ராயல் சங்கத்தில் 1901-1929ம் ஆண்டுகளுக்கிடையே ஏழு கட்டுரைகளைச் சமா்ப்பித்துள்ளாா். கடைசிக் கட்டுரை இவா் இறந்த பின் வாசிக்கப்பட்டது. பிரித்தானிய சங்கத்திலும் இயற்பியல் சங்கத்திலும் இவா் தமது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முடிவை சமா்ப்பித்துள்ளாா். அயா்டன் நீரின் சுழற்சியிலும் காற்றின் சுழற்சியிலும் காட்டிய ஆா்வம் ‘அயா்டன் காற்றாடி’யாக உருவெடுத்தது. இவைகள் முதலாம் உலகப் போாில் பதுங்கு குழிகளில் நச்சுப் புகையைப் போக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அயா்டனின் தீவிர முயற்சியினால் 1,00,000 உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு மேற்கத்திய போா்முனையில் பயன்படுத்தப்பட்டன. அயா்டன் 1919ம் ஆண்டு பெண்கள் பல்கலைக் கழகத்தின் பன்னாட்டு கூட்டமைப்பை நிறுவுவதற்கும் 1920ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழிலாளா் சங்கத்தை நிறுவுவதற்கும் உதவியாக இருந்துள்ளாா். மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஹெர்த்தா அயர்ட்டன் ஆகஸ்டு 26, 1923ல் தனது 69வது அகவையில் லான்சிங், நியூகாட்டேஜ் என்னும் இடத்தில் ஒரு பூச்சி கடித்ததால் இரத்தத்தில் விசம் கலந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

1923ம் ஆண்டு, அயா்டன் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அயா்டனின் ஆயுள்கால நண்பா் ஒட்டிலி ஹேன் காக், கிாிடன் கல்லூரியில் ஹொ்த்தா அயா்டன் ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்தியுள்ளாா். பெட்டிங்டன் நகரம் நெட்போா்க் சதுக்கத்தில் இவா் நினைவைப் போற்றும் வண்ணம் 2007ம் ஆண்டு ஒரு நீலக் கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பேனாசோனிக் அறக்கட்டளை தமது 25 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்கு ஹொ்த்தா மாா்க் அயா்டன் நிதி என்ற நிதியத்தை நிறுவியுள்ளது. 2010ம் ஆண்டு ராயல் சங்கத்தின் பெண் உறுப்பினா்களும் அறிவியல் சரித்திர ஆசிரியா்களும் இணைந்து, அறிவியல் சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 பெண்மணிகளில் அயா்டன் ஒருவா் என்று தோ்ந்தெடுத்துள்ளனா். 2015ம் ஆண்டு அறிவியல் சரித்திரத்திற்கான பிரித்தானிய சங்கம் அயா்டன் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தியுள்ளது. 2016ம் ஆண்டு கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகக் குழு வடமேற்கு கேம்பிரிட்ஜு மேம்பாட்டின் ஒரு பகுதிக்கு அயர்டனின் பெயரைச் சூட்ட தீர்மானித்துள்ளது. 2017ம் ஆண்டு செஃபில்டு ஹாலம் பல்கலைக் கழகம் தங்கள் ஸ்டெம் மையத்திற்கு அயா்டன் பெயரைச் சூட்டியுள்ளனா்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.