• Mon. May 29th, 2023

இன்று தேசிய தொழில்நுட்ப தினம்

ByKalamegam Viswanathan

May 11, 2023

தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது- தேசிய தொழில்நுட்ப தினம் (National technology day) ( மே 11)

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11, மே 13ல், ராஜஸ்தானின் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது.

சக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான்-II (Pokharan-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதே ஆண்டு பாக்கித்தான் மே 28 மற்றும் மே 30ம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது. இந்தியா முதன்முதலாக மே 18, 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு மே 11, 1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு “சக்தி” என்று குறிப்பெயர் வழங்கியிருந்தது. சக்தி என்ற சமசுகிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும். அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

உள்நாட்டு தயாரிப்பில் உருவான திரிசூல் ஏவுகணை, ஹன்சா-3 விமானம், கண்டம் விட்டு கண்டம் பாயும் (5,000 கி.மீ., சுற்றளவு) அக்னி-5 ஏவுகணை, இஸ்ரோவின் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், உள்நாட்டு தயாரிப்பில் உருவான ‘கிரையோஜெனிக்’ இன்ஜின், நிலவை ஆராய ‘சந்திராயன்’, செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையின் முக்கிய சாதனைகள். விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில், இந்தியா மேலும் சிறப்பாக முன்னேற இளைஞர்கள் பாடுபட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களை புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழையின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கவும், உணவளிக்கவும் உதவியது இந்தத் தொழில்நுட்ப வரவான சமூக வலைதளங்கள்தான். மேலும், சமீப காலங்களில் தமிழகம் கண்டிராத மிகப் பெரிய போராட்டமான இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் திட்டமிடப்பட்டு, தகவல் பரப்பப்பட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பங்கு அளவிடமுடியாது. தினசரி வேலைக்குச் செல்லும் ஒருவரை எடுத்துக்காட்டாக கொள்வோம். காலையில் மொபைலில் அலாரம் அடித்து கண் விழிப்பது முதல், பேஸ்புக்-வாட்சப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது, அயர்ன் செய்வது, ஹீட்டர் போட்டு குளிப்பது, தண்ணீர் இல்லையென்றால் மோட்டார் போடுவது, மின்னடுப்பில் சமைப்பது, சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது, வேலைக்கு நேரமாகிவிட்டதால் பைக்கில் வேகமாகச் செல்வது மற்றும் அலுவலகத்தில் நுழைந்தவுடன் பிங்கர் பிரிண்ட் மூலம் அட்டெண்டன்ஸ் போடுவது மட்டுமல்லாமல், அலுவலகத்தில் கணினியின் முன் நாள் முழுவதும் வேலைசெய்வது, இடையிடையே ஆன்லைனில் புதிய கேஜெட்ஸ் நிலவரம் பார்ப்பது, சாட்டிங் செய்வது வரை இன்னும் எக்கச்சக்கமான இடங்களில் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது.

“அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”, இது பழமொழியாக இருந்தாலும், இந்த காலத்திற்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. மனிதனின் வாழ்க்கையை எளிமையாக, விரைவாக, துல்லியமாக நடத்துவதற்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாம், நாம் வாழும் நிஜ உலகில் நேரத்தையும், எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் மாய உலகிற்கு மெல்ல மெல்ல நம்மைநாமே அறியாமல் அடிமையாகி வருகிறோம். எனவே, நம் அனைவராலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் தொழில்நுட்பங்களை நுட்பத்துடன், அளவுடன், ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *