• Thu. Dec 12th, 2024

இன்று சர்வதேச இளைஞர் தினம்: ஒரு பார்வை..!

Byவிஷா

Aug 12, 2022

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச இளைஞர் தினம் (ஐவெநசயெவழையெட லுழரவா னுயல) உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இன்றைய இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு என்பது முக்கியமானது குடும்ப முன்னேற்றமும் இவர்கள் கையில்தான் உள்ளது.
உலக மக்கள் தொகையில் ஐ.நா அறிக்கையின்படி ஆறில் ஒரு பங்கு 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர்.
ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயல்களை கௌரவித்து அவர்களுக்கு மதிப்பளிப்பதும் இளைஞர்கள் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படவேண்டும் கல்வி, அரசியலில் பங்கு, வேலைவாய்ப்பு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும் சுமார் 20 சதவீதமான இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சிறந்த எதிகாலத்திற்கு வழிகாட்டுவதே இளைஞர் தினத்தின் நோக்கமாகும். எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திறமைகளை வளர்த்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ, வேண்டும்.
1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் தலிவர்கள் குழு உலக அளவில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் 1999 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் இளைஞர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இளைஞர்களை பற்றி அறிந்த சுவாமி விவேகானந்தர், இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள். இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினார்.
அவர் பிறந்த தினமான ஜனவரி 12 ஆம் தேதியை 1985 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் கூட்டம் நம்மிடையே உள்ளது.
எந்த மொழியாக இருந்தாலும், கல்வி கற்பதில் முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.
விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது. வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறையை வழி நடத தன்னலமற்ற தலைவர்களும், இளைஞர்களும் சேந்தால் எந்த நாடும் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
உலகம் முழுவதும் இளைஞர்கள் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை அங்கீகரிப்பதற்கு இந்த தினம் உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்கும் இன்னல்கள், இதனால் பாதிக்கப்படும் அவர்களின் மனநலம் குறித்த முக்கியமான விவாதங்களும் இன்றைய தினத்தில் பேசப்படுகின்றன. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பல்வேறு நிறுவனங்கள் இன்றைய தினத்தில் விவாதங்கள், பிரச்சாரங்கள் மற்றும் பேச்சுக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இளைஞர் தினத்தின் 2022 இன் கருப்பொருள் “தலைமுறை ஒற்றுமை: அனைத்து வயதினருக்கும் ஒரு உலகத்தை உருவாக்குதல்”. போன்றவை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரல் 2030 இன் படி நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய எல்லா தலைமுறைகளிலும் நடவடிக்கை தேவை என்ற செய்தியை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.