

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இன்று 383வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை பட்டினம் 1639 ஆம் ஆண்டு உருவானது. ஆண்டுதோறும் ஆக 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து வருபவர்களுக்கும் சரி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களுக்கும் சரி , சென்னை எப்போதுமே ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களை வரவேற்று, அரவணைத்து, அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதே இல்லை எனலாம். சென்னைக்குள் வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் மீண்டும் சென்னைக்கு வரவேண்டும் என்ற எண்ணமும் அதே சமயம் சென்னையை விட்டு செல்லாமல் இங்கேயே குடியிருக்கும் எண்ணமும் அதிகம் உண்டு.
அந்த வகையில் இன்று வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு வயது 383. இந்த 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. மிகச் சிறப்பான பல நினைவுகளை சென்னை மாநகரம் நமக்கு தருகிறது. ஜாதி, மத, பேதம் இன்றி வாழ்க்கை வேலை குடும்பம் என தனக்கான ஒரு அடையாளம் என ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் சென்னையை ஆண்டுதோறும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். தொடர்ந்து கொண்டாடுவோம்.