• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மதுரை ஆனையூரில் உள்ள மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு ஒரே நாளில் போராட்டம் நடத்தும் வகையில் டிட்டோஜாக் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பும் ஆசிரியர்கள் திரளாகக் கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். உமைய பார்வதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் செல்வகுமரேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ஒச்சுக்காளை, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலச்சந்திரன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மனோகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேற்கு வட்டார செயலாளர் ஜெபத்துரை, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சிவபாலன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேற்கு வட்டார செயலாளர் கவிதா, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். குறிப்பாக, 1999-ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடுபட்ட வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள தணிக்கைத் தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்து, கல்வித்துறையில் நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக லூர்துமேரி நன்றி கூறினார். இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் நிறைவடைந்தது.