கஞ்சா கடத்தலை தடுக்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருளுடன் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர்.
புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அண்மையில் கஞ்சா வழக்கில் கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அருக்கா என்கிற பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு புதுச்சேரி வந்த ரயிலில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரயிலில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ரயிலில் வந்த 3 பேரிடம் உள்ள சாக்கு மூட்டையை ஆய்வு செய்ததில், அவர்களின் உடமைகளுடன் சேர்த்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.