• Fri. Apr 19th, 2024

‘இரவின் நிழல்’ படத்தில் மூன்று ஆஸ்கர் வின்னர்கள்!

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தற்போது இயக்கி நடித்து வரும் ‘இரவின் நிழல்’ படத்தில், 3 ஆஸ்கர் வின்னர்கள் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முற்பது வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கி வருபவர் பார்த்திபன். தனது செயல்களில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர், தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்த்திபன், இந்தப் படம் முழுவதும் தனி ஒருவராக நடித்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருந்ததால் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் படைப்புரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும், சென்ற ஆண்டு தேசிய விருதையும் பெற்றது! தற்போது பார்த்திபன், இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப்படம் ஆசியாவிலேயே முதன்முதலாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திரைப்படம் என்று பார்த்திபனால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது மேலும் இரு ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் ‘இரவின் நிழல்’ படத்தில் இணைந்துள்ளனர். அதன்படி, இந்தப் படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக கட்டா லங்கோ லியான் என்பவரும், சவுண்ட் டிசைனிங்கிற்கு கிரைக் மானுக்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘வ்ப்லாஸ்’ என்ற படத்திற்காக சிறந்த சவுண்ட் டிசைனுக்கான ஆஸ்கர் விருது கிரைக் மானுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு கட்டா லங்கோ லியோனுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் ‘இரவின் நிழல்’ படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து 3 ஆஸ்கர் விருது வின்னர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *