கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலங்கரைப்பட்டி ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கசாமி மகன் தங்கராஜ் (25) கோவில்பட்டி முத்து வீரப்பன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (19) மற்றும் கழுகுமலை பகுதியை சேர்ந்த நிசார் அலி மகன் ஆசிக் ராஜா (20) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தியதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் தங்கராஜ், காளிராஜ் மற்றும் ஆசிக் ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ராணி மற்றும் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.