• Wed. Apr 24th, 2024

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு….

சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது…….

இறுதி ஊர்வலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், பாமக தலைவர் ஜிகே மணி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்…….

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், இளையமகன் வீரபாண்டி ராஜா. இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.அக்டோபர் 2 ஆம் தேதியான நேற்று வீரபாண்டி ராஜாவிற்கு 58 வது பிறந்தநாளில் தந்தையின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி ராஜாவின் உடல் பூலாவரி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலமாக சேலம் வருகை தந்து, இறந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நேற்றைய தினமே
அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் பொய்யாமொழி, வெள்ளக்கோவில் சாமிநாதன், மதிவேந்தன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் திமுக பொருளாளர் டி.ஆர் தங்கபாலு மற்றும் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.மேலும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமான அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், பாமக தலைவர் ஜிகே மணி, சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். வீரபாண்டி ராஜா வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அவரது சொந்த நிலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தின் அருகே வீரபாண்டி ராஜாவின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரபாண்டி ராஜா கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஏற்கனவே சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *