• Fri. Apr 26th, 2024

பல்வேறு தீர்மானங்களை முன்னிட்டு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 ஆம் தேதி போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாநகர மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது கிளை மாநாடு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைசாமி, கிங்ஸ்லி, சிலுவை, செல்வ கணேஷ் ஆகியோர்களுக்கு நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது. நாகர்கோவில் வட்டார குழு உறுப்பினர் ராஜநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூர் முகமது மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் நோக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூரில் அகில இந்திய மாநாடு நடத்த அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அதன் முன்னோட்டமாக நாடு முழுவதும் கிளை, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான மாநாடுகள் நடத்தி அதன் தீர்மானங்களை தேசிய மாநாட்டில் கொண்டு சேர்க்க உள்ளனர். அந்த அடிப்படையில் இன்று முதல் கிளை வட்டார மாவட்ட மாநில7 மாநாடுகள் நாடு முழுவதும் தொடங்கி உள்ளன.

மேலும், இந்த மாநாட்டில் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதும் மரணக் குழிகளாக உள்ளது. இதை செப்பனிடுவதில் அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து வரும் 26 ம் தேதி நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போன்று நாகர்கோவில் நகர் முழுவதும் திட்டக்கழிவு குப்பைகளை ஆங்காங்கே சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரித்து வருவதால், இதனை உடனே சீர் செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோன்று கூடங்குளத்தில் அணு கழிவுகளை அந்த வளாகத்திலே புதைப்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி புதைக்கும் போது நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் நோய்வாய்ப்பட்டு மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்ல தமிழகத்திலேயே புற்றுநோய் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உள்ள குமரி மாவட்டத்திலும் இந்த கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்து புற்று நோயாளிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். ஆகவே அணுக் கழிவுகளை அந்த இடத்திலேயே புதைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *