துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில்,. குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்கிறது. இப்போது சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கு ஒன்று சொல்கிறேன். இது பிரதமர் மோடியின் மாநிலத்தில் உள்ள சட்டம்தான்.
பிரதமர் மோடியின் சொந்த குஜராத் மாநிலத்தில் தேடுதல் குழு பரிந்துரைக்கு மூவரில் ஒருவரை மாநில அரசே நியமிக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதை இங்கே பாஜக எதிர்த்து உள்ளது. பல மாநிலங்களில் இதே நிலைதான் உள்ளது.
ஆந்திர பிரதேசத்திலும் அரசின் பரிந்துரை அடிப்படையில்தான் நியமனம் நடக்கிறது. இப்போது அரசின் மசோதாவை எதிர்க்கும் அதிமுக, முன்பு துணை வேந்தர்களை அரசுதான் நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பூஞ்சியின் பரிந்துரைத்தார்.
இது பற்றி ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம் கருத்து கேட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதில் கருத்து தெரிவிக்கப்பட்டது. நாங்கள் சொன்ன கருத்தைதான்.. அதாவது மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றுதான் அப்போது அதிமுகவும் சொன்னது. இதனால் அதிமுகவிற்கு இந்த மசோதாவில் நெருடல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.