முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக குறைக்கப்பட்டதால், தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் நீர்வரத்து அதிகரித்து முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை தாண்டி உயர்ந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து நீர்த்திறப்பு விநாடிக்கு 900 கன அடியில் இருந்து விநாடிக்கு 1,867 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு, தலா 42 மெகாவாட் வீதம், தினசரி 168 மெகாவாட் என்ற அளவில் மின் நிலையத்தில் தினசரி முழு மின் உற்பத்தி நடந்து வந்தது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 168 மெகாவாட்டில் இருந்து 117 மெகா வட்டாக குறைந்துள்ளது. மின் நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு தலா 39 மெகாவாட் வீதம் 117 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. அணையில் இருந்து நீர் திறப்பிற்கு ஏற்ப மின் உற்பத்தியில் மாற்றம் வரும் என தமிழக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.