

தானியமாம், தானியம் – சில மருத்துவக் குறிப்புகள்…
நாம் அன்றாடம் உண்ணும் தானியங்களில் கூட சில மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. அந்த வகையில் அது பற்றிக் கூறும் ஒரு செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் தானியங்கள் தரும் மருத்துவப் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.
பச்சரிசி :- இது பலத்தைத் தரும். பித்தத்தை தணிக்கும். வாதத்தை விருத்தி செய்யும் ஆனால் பத்தியத்திற்குதவாது.
புழுங்கலரிசி :- இது பாலர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏன் நோயாளிகளுக்கும் கூட பொருத்தமான உணவாகும். பத்தியத்திற்காகும்.
கோதுமை :- இது பலம், சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். வாதத்தையும், பிரமேகத்தையும் நீக்கும். ஷயம், மது, மேகம் முதலிய நோயினருக்கு நல்ல உணவாகும்.
சோளம்:- சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இவை வாய் நாற்றத்தைப் போக்கும்.சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் பயன்படும் முக்கியப் பொருளாகும்..
கேழ்வரகு:- இது வாதம் அல்லது பித்தவாதத்தை உண்டாக்கும். பலம் எற்படும். இது கபதேகிகளுக்கு சிறந்த உணவாகும்.
கம்பு:- இதனால் சொரி, சிரங்கு உண்டாகும். ஆனால் உடலுக்கு பலத்தை தரும் சரீரத்தின் வெப்பத்தைத் தணிக்கும். அதனால் சிலர் குளிர்ச்சி என்பர்.
கடலை :- நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது. நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது. நிலக் கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உளுந்து :- இது பித்தாதிக்கம், எலும்புறுக்கி முதலியவைகளை நீக்கும். இடுப்பிற்கு பலம், வீரியவிருத்தி முதலியவைகளை உண்டாக்கும்
துவரை :- இது சாதாரணமாக உடலுக்கு பலத்தைத் தருவதுடன், இது சிறந்த பத்திய உணவாகும். இது சுரம், சன்னி , முதலிய நோயிலும் , மிக மெலிந்தவர்களுக்கும், கடும் பத்தியர்களுக்கும் உதவும்.
பச்சைப்பயறு:- இது பித்தத்தை நீக்கும், வாய்வை உண்டாக்கும். சீதளமென்பர்.
பட்டாணி :- இது நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் வலிவைத் தரும். ஆனால் வாய்வையும், மந்தத்தையும், உண்டாக்கும்.
மொச்சை :- திரிதோஷணங்களை விருத்தி செய்யும். உஷ்ணத்தை தணிக்கும், மலத்தைப் பெருக்கும்.
பார்லியரிசி:- இது சிறுநீரைப்பெருக்கும், மந்தபேதியைக் கட்டும், பசியைத் தணிக்கும் சுரம் முதலிய நோயாளிகளுக்கு கஞ்சிக்கு உதவும்.

