

சென்னையில் செல்போன்களை திருடி ஆந்திராவில் விற்பனை செய்துவந்த இருவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்று குறைந்த விலையில் செல்போன்களை விற்று வந்துள்ளனர். அந்த செல்போன்கள் திருட்டு போன்கள் தான் எனத் தெரிந்தும் கூட குறைந்த விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி வந்துள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர், கூடூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில், அவர்கள் சென்னையில் செல்போன்களை திருடி ஆந்திராவிற்கு வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 228 ஸ்மார்ட் போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
