



சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் குறித்து தேனி வனக்கோட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளிர்கால ஒரு நாள் இயற்கை “சூழல் உலா” நடைபெற்றது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், லோயர்கேம்ப் பகுதியில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுக் மணி மண்டபத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் குளிர்கால இயற்கை “சூழல் உலா” இன்று நடைபெற்றது. 100 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர்.சமர்த்தா அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வனம் மற்றும் காலநிலை சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி பின்பு மாணவர்களை வாழ்த்தி கர்னல் ஜான் பென்னிகுக் மணி மண்டபத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேரூந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் மணி மண்டபத்தினை கண்டு ரசித்ததுடன், அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் தெரிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சுரங்கனார் காப்புக்காடு பகுதிக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு வனம் சார்ந்த நன்மைகளை வனத்துறை அலுவலர்கள் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களுக்கு மறு சுழற்சி செய்யப்பட்டதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர், தேனி தா.செசில் கில்பர்ட், வனச்சரக அலுவலர்கள் ம.செல்வராணி, மயிலாடும்பாறை VSC சரகம், பெ.க.ஸ்டாலின், கம்பம் மேற்கு சரகம், தேனி மாவட்ட பசுமைத்தோழர் B.பிரியங்கா, வனப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

