படகில் இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய மீனவர்கள் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 மீனவர்கள் ஒரே படகில் கடந்த 15ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் உள்ள துறைமுகத்திற்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது படகில் இருந்த ஒரு மீனவரின் செல்போன் காணாமல் போனது. இதனால் அதே படகில் இருந்த மற்ற மீனவர்களின் உடைமைகளை தேடியப்போதும் கிடைக்கவில்லை. பின்னர் படகில் இருந்த சீனா என்பவர் தான் செல்போனை திருடியதாக சந்தேகித்து அவரிடம் விசாரித்துள்ளார்.
ஆனால் தான் செல்போனை எடுக்கவில்லை என சீனா கூறியுள்ளார். எனினும் சந்தேகம் தீரான 6 மீனவர்கள் சேர்ந்து, படகில் பெரிய மீன்களை கட்டித் தொங்க விடும் கொக்கியில் சீனாவை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தினர். நான் செல்போனை எடுக்கவில்லை என்றும் தாக்கியதில் வலியால் கத்தியபோதும் அக்கும்பல் அவரை விடாமல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து மங்களூரு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், படகில் இருந்த மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. பின்னர் மங்களூரு துறைமுகத்திற்கு திரும்பியதும் 6 மீனவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து, 6 மீனவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.