• Fri. Apr 19th, 2024

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. விரைவில் சுற்றுலா பயணிகள்
பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதில் திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை. இந்த வருடம் ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணி காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் படகு சேவை விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டும் இயக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்ததால் திருவள்ளுவர் சிலையை சுற்றி கட்டப்பட்டுள்ள சாரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் விரைவில் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *