• Sat. Apr 20th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சக்கரமே பெண்கள் முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு சுழல்கிறது : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!..

Byமதி

Oct 12, 2021

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் உள்ள பெங்களூர் கிராப்ட் எனப்படும் வாழை பட்டையில் இருந்து கூடைகள் தயாரிக்கும் தொழிற் மையத்தை சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஜெனரல் ஜூடித் ராவின் உடன் சென்று பார்வையிட்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

USAID என்ற சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க அமைப்பின் மூலமாக நடைபெற்று வரும் தொழிற்மையத்தின் நிகழ்வில் உரையாற்றிய அவர், ‘சமூக நீதி அடிப்படையிலும், சுகாதாரத்திலும், 1000 நபர்களுக்கு எத்தனை செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளார்கள் என்ற கணக்கின் அடிப்படையிலும், நியாய விலைக்கடையில் கிடைக்கும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து வைத்து பார்க்கிற போது இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

இதற்கு அடிப்படை காரணம் எங்களது முதலமைச்சர் கூறிய படி நானும் தற்போது கூறுகிறேன். எந்தெந்த சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சுய மரியாதையை ஆகியவை அளிக்கப்படுகிறதோ அவை முன்னேறிய சமுதாயமாக இருக்கும். இவைதான் அடிப்படை பொருளாதார கொள்கை. ஏனென்றால் பாதி மக்கள் தொகையில் உள்ள பெண்கள் படித்து முன்னேறினார்கள் என்றால் அனைத்து சமுதாயமும் முன்னேறும். இதனை மிக தெளிவாக அறிந்தது திராவிட இயக்கம்.

எனது அப்பா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தவர். எனது தாத்தா நீதிக்கட்சியில் தலைவராக இருந்து மெட்ராஸ் மாகாணத்தில் முதல் அமைச்சராக இருந்தவர். எனது கொள்ளு தாத்தா நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் துணை தலைவராக இருந்தவர்.

அதன் அடிப்படை கொள்கை பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வரலாற்றில் இதற்கு சான்றுகள் உள்ளன. 1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பை முதல் முதலில் ஏற்ற போது பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த மாகாணம் மெட்ராஸ் மாகாணம் ஆகும்.

கல்வியின் மூலம் தான் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என்று 1921 ல் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்த போது பெண் குழந்தைக்கும் கட்டாய கல்வியை கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சி. அன்றில் இருந்து தொடங்கி இன்று வரை தொடர்ந்து பெண்களுடைய உரிமைக்கும் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் போராடிக் கொண்டு இருப்பது திராவிட இயக்கமும் திராவிட முன்னேற்ற கழகமும் ஆகும்.

நான் எதிர்க்கட்சி எம் எல் ஏ வாக இருந்த போதே என் தொகுதியில் எங்கெல்லாம் பெண்கள் பள்ளி இருக்கிறதோ அங்கு கூடுதல் வகுப்பறை கட்டி கொடுத்தேன். அங்கெல்லாம் கழிப்பறை வசதி ,தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தேன். ஏனென்றால் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதே எங்களது கொள்கை. பள்ளி மாணவிகளிடம் பேசும் போது கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என வலியுறுத்துவேன். எனது இல்லத்திற்கு அருகே உள்ள டோக் பெருமாட்டி கல்லூரி வைர விழாவிற்கு தலைமையேற்று பேசிய நான் ,நன்றாக படித்துள்ள நீங்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

தொழில் முனைவோர்களாக மாறி சமுதாய முன்னேற்றத்தில் பங்கு வகிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம் எல் வாக இருக்கும் போதே சொன்னேன். ஆளும் கட்சியாக மாறிய பிறகு தலைவர் என்னை அழைத்து கூறியதன் படி தமிழ்நாடு நிதி நிலைமை எந்த நெருக்கடியில் உள்ளது என்ற அடிப்படையில் வெள்ளை அறிக்கை ஒன்றை உருவாக்கினேன் .ஆனால் அதையெல்லாம் தாண்டி தேர்தல் வாக்குறுதியின் படி முதல் மூன்று வாக்குறுதிகளில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான 2200 கோடி கடன் தள்ளுபடி. அது அனைத்து மகளிரையும் சென்று சேர்ந்தது. ஆட்சி சக்கரத்தின் முதல் தடமே பெண்கள் முன்னேற்றம் ஆகும். திறனாய்வை பொறுத்தமட்டில் நாம் யார் என்று முதலில் அறிந்து கொண்டால் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்ய முடியும்.

அதனால் தான் 21 வயதில் வெளிநாடு சென்ற நான் எனது தந்தை, தாத்தா பெயர் தெரியாத இடங்களில் படித்து பல்கலைக்கழக பட்டம் பெற்று, நிறுவனங்களில் பணியாற்றி முதன்மை இயக்குனர், மேலாண்மை இயக்குனர், மூத்த மேலாண்மை இயக்குனர் என்ற படிநிலைகளில் உயர்வு பெற்று நான் யார் என தெரிந்து கொண்ட பிறகு அடுத்தவர்களுக்கு என்ன செய்ய முடியும் என தெரிந்து கொண்ட பிறகு அரசியலுக்கு வந்தேன்.

உங்களுடைய பயணத்தில் நானும் சேர்ந்து பயணிப்பது போன்று உணர்வை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் தொழில்கள் செய்து, பணியாற்றி முறையாக வரி செலுத்தி பணிகள் மேற்கொண்டவர் என்ற முறையில் அந்த நாட்டில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவிகள் இந்த சுற்று முழுமையாகிறது என கருதுகிறேன். அந்த அடிப்படையில் உங்களின் முயற்சிகளுக்கு நான் பாராட்டு தெரிவிப்பதோடு நீங்கள் இதனை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். இன்னும் நிறைய பேர்களை சேர்த்து கொள்ள வேண்டும். ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதில் உறுதுணையாக எங்கள் முதல்வரும் நானும் இருப்போம் என பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *