மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெறும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இன்று துவங்கியது. துவக்க விழாவில் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி, எம் ஆர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்பு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அண்ணல் காந்தியின் கனவை நனவாக்க மத்திய அரசு கதர் உள்ளிட்ட கிராமப்புற தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மிக மிக குறைவாக இருந்தபோதும் இந்தியாவில் விலை உயர்த்தப்பட்டதாகவும், தற்போது விலையை குறைப்போம் என கூறிக்கொண்டே உயர்த்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை வசூலித்து விட்டு மாநிலங்களுக்கு அதற்குரிய பங்கை வழங்கவில்லை எனவும் மாநிலங்கள் மத்திய அரசிடம் கைகட்டி நிற்கும் நிலை இந்தியா முழுவதும் உள்ளதாகவும் மத்திய அரசு அதை மாற்ற வேண்டும் எனவும் கூறிய அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பால் வரிஏய்ப்பு நடைபெறுவதாக கற்றஞ்சாட்டினார். தற்போதைய திமுக அரசு அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருவதால் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்றார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராடிய திமுக, தமிழக அரசில் பொறுப்பேற்ற பின்பு,வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி விவசியிகளுக்கு துணைநிற்கும் நிலையில், இன்று காந்தி ஜெயந்தி நாளில் கன்னியாகுமரியில் நடைபெறவிருந்த விவசாயிகளின் போராட்டம் மக்களின் இயல்பு நிலையையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் என்பதால் மட்டுமே விவசாயிகள் கைது செய்யப்பட்டதாகவும் முறையாக அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் கூறினார்.