

இந்திய கிரிக்கெட் அணியின் ரன்மெஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட்கோலி நேற்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளில் உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி தனது முக்கியமான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியையும் வீழ்த்தியது.
ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில் சுருட்டி. 6.3 ஓவர்களிலே இந்திய அணி வெற்றி பெற்று தனது ரன்ரேட்டை +1.619 என்ற கணக்கில் மற்ற அணிகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் முடிந்ததும் இந்திய அணியின் ட்ரெஸ்சிங் ரூமில் கோலியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கேக் மீது முன்னாள் கேப்டனும், ஆலோசகருமான தோனி மெழுகுவர்த்திகளை அலங்கரிக்க பின்னர் வந்த கோலி கேக் வெட்டினார். தோனி, முகமது ஷமி, ஜடேஜா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், ரிஷப்பண்ட் என இந்திய வீரர்கள் சுற்றி நின்று பிறந்தநாள் வாழ்த்துகள் பாடினர். கேக்கை வெட்டிய கோலி மகேந்திர சிங் தோனிக்கு முதல் கேக்கை ஊட்டினார்.
பின்னர், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ் என்று அனைவருக்கும் ஊட்டினார். தனது மனைவி, மகளை பிரிந்து இருக்கும் விராட் கோலி, சக வீரர்களுடன் இந்தாண்டு பிறந்தநாளை கொண்டாடினார். இதனிடையே, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்திய பிறகு இந்திய அணி வீரர்கள் ஸ்காட்லாந்து அணி வீரர்களை அவர்களது ட்ரெசிங் ரூமீற்கு சென்று நேரில் சந்தித்தனர். இந்திய கேப்டன் விராட்கோலி தலைமையில் சென்ற இந்திய வீரர்கள், அணி நிர்வாகிகள் சிலர் ஸ்காட்லாந்து நாட்டு வீரர்களுடன் சிறிது நேரம் உரையாடினர்.
